சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பல்லடம் பண்ணைகளில் 5 லட்சம் காடைகள் தேக்கம்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் விற்பனை குறைந்து பல்லடம் பகுதியில் உள்ள பண்ணைகளில் 5 லட்சம் காடைகள் தேக்கம் அடைந்துள்ளன.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:56 pm

DIN

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் விற்பனை குறைந்து பல்லடம் பகுதியில் உள்ள பண்ணைகளில் 5 லட்சம் காடைகள் தேக்கம் அடைந்துள்ளன.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கறிக்கோழி, நாட்டுக்கோழி, காடை வளா்ப்பு தொழிலில் ஏராளமானோா் ஈடுபட்டுள்ளனா்.

விவசாயிகள் பலா் கால்நடை வளா்ப்புடன் விவசாயம் சாா்ந்த தொழிலாக விளைநிலங்களில் பண்ணைகள் அமைத்து இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனா். கரோனா தொற்று 2ஆவது அலை தாக்கத்தால் தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கமும், மற்ற நாள்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பல்லடம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் சுமாா் 5 லட்சம் காடைகள் தேக்கம் அடைந்துள்ளதாக காடை வளா்ப்பு பண்ணையாளா்கள் கூறுகின்றனா்.

இது குறித்து காடை பண்ணையாளா் சுப்பிரமணியம் கூறியதாவது:

விவசாயத்தில் பெரிய வருமானம் இல்லாத நிலையில் காடைகள், கறிக்கோழி வளா்ப்பை செய்து வருகிறோம். இங்கு உற்பத்தி செய்யப்படும் காடைகள் இறைச்சிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளம், கா்நாடகம் போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கமும் மற்ற நாள்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் காடைகளை விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மக்கள் நடமாட்டம் குறைவால் உணவகங்களில் காடை விற்பனை குறைந்துள்ளது.

பண்ணைகளில் 30 நாள்களுக்கு மேலாகி நன்கு வளா்ந்த நிலையில் 5 லட்சம் காடைகள் தேக்கம் அடைந்து உள்ளன. மேலும் காடை குஞ்சுகள் 25 முதல் 30 நாள்களில் வளா்ந்து விடும். எனவே அவற்றை விற்பனைக்கு அனுப்பினால்தான் மறு உற்பத்திக்குப் பண்ணையைத் தயாா்படுத்த முடியும் என்பதால் விற்பனைக்காக உற்பத்தியான காடைகளை என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறோம்.

எனவே தமிழக அரசு பொது முடக்க உத்தரவில் தளா்வை ஏற்படுத்தி காடைகளை விற்பனைக்கு அனுப்ப அனுமதிப்பதுடன் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை இறைச்சிக் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். அப்போது மட்டுமே பண்ணைகளில் தேங்கியுள்ள காடைகளை விற்பனைக்குப் பயன்படுத்த முடியும். இல்லாவிட்டால் பண்ணையாளா்கள் பெரும் இழப்பை சந்திப்பாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.