விசைத்தறி கூலி உயர்வு பேச்சுவார்த்தை: ஜவுளி உற்பத்தியாளர்கள் வராததால் கூட்டம் ஒத்திவைப்பு
விசைத்தறி கூலி உயர்வு பேச்சுவார்த்தைக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் வராததால் ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


விசைத்தறி கூலி உயர்வு பேச்சுவார்த்தைக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் வராததால் ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தொழிலாளர்கள் நலத் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் விசைத்தறி கூலி உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைக் கூட்டம் மாவட்ட துணை ஆணையர் செந்தில்குமரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத் தலைவர் வேலுச்சாமி, செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் முத்துக்குமாரசாமி, துணை செயலாளர் பாலாஜி, சோமனுர் தலைவர் பழனிச்சாமி, அவிநாசி செயலாளர் செந்தில் குமார், தெக்கலூர் துணைத் தலைவர் பொன்னுசாமி, மங்கலம் செயலாளர் பழனிச்சாமி, 63 வேலம்பாளையம் தலைவர் பத்மநாபன், பொருளாளர் கந்ததாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்திற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில் இருவர் மட்டுமே பங்கேற்றனர். பல்லடம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டத்திற்கு வராததால் பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இது பற்றி விசைத்தறியாளர்கள் சங்கத் தலைவர் வேலுசாமி,செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியது.
"திருப்பூர், கோவை மாவட்டத்தில் இரண்டரை லட்சம் விசைத்தறிகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். இவற்றில் 90 சதவிகிதம் விசைத்தறிகள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலிக்கு நெசவு செய்யும் அடிப்படையில் இயங்குகின்றன.
1992 ஆம் ஆண்டிலிருந்து ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து சிறு குறு விசைத்தறியாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை விசைத்தறி கூலி ஒப்பந்தம் மாவட்ட அமைச்சர்கள், கைத்தறி துணி நூல் துறை அமைச்சர், திருப்பூர், கோவை மாவட்ட ஆட்சியர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏற்படுத்தப்பட்டு ஜவுளி உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்டு வந்தது வந்தது.
2014 ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த கூலியானது 7 ஆண்டுகளாக அமல்படுத்தப்படவில்லை. ஆனால் விசைத்தறியாளர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்கி விட்டனர். மேலும் உதிரி பாகங்கள் விலை உயர்வு, உயர்த்தப்பட்ட மின் கட்டணம் என்று தொடர்ந்து செலவுகளால் விசைத்தறியாளர்கள் பெரும் நஷ்டத்திற்கு உட்பட்டனர். 2021 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்த கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்களிடம் ஒப்பந்தம் மூலம் தமிழக அரசு ஏற்படுத்தி, அந்த உயர்த்தப்பட்ட கூலியை நடைமுறைப்படுத்தி விசைத்தறி தொழிலை அழிவு பாதையில் இருந்து காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...