

திருப்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியில், பிஏபி வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் வரவேண்டிய தண்ணீரை பிஏபி நிர்வாகம் முறைகேடாகப் பயன்படுத்தி, பல ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும், சமச்சீர் பாசனம் என்று பெயரளவில் வைத்துக் கொண்டு, வெள்ளகோவில் கிளைக்குத் தேவையான தண்ணீரை பிஏபி நிர்வாகம் கொடுப்பதில்லை எனவும் புகார் தெரிவித்து.
விவசாயத்திற்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி காங்கயம், வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் கடந்த 10 வருடமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தக் கோரிக்கை தொடர்பாக கடந்த ஒன்றரை வருடமாக பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய் (காங்கயம்-வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்கம் சார்பில் உண்ணாவிரதம், கடையடைப்பு, சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக சனிக்கிழமை திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, தாங்கள் அறிவித்தபடியே ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு காங்கயம் நகரம், திருப்பூர் சாலைப் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
இதெற்கென பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு சனிக்கிழமை இரவு பந்தல் அமைத்து, போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தயார் நிலையில் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் போராட்டப் பந்தலில் குழுமியிருந்த பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய் (காங்கயம்-வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் 20 பேரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கயம், வெள்ளகோவில் பகுதியில் இருந்து வரும் விவசாயிகளைக் கைது செய்வதற்காக திருப்பூர் சாலை,.சென்னிமலை சாலை, கரூர் சாலை, தாராபுரம் சாலை ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கை செய்யப்பட்டு, வாகனங்களில் வரும் விவசாயிகளைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.
இதையும் படிக்க | காலம் கடந்து நிற்கும் கமல்
இதன் பின்னர், காலை 10 மணியளவில் வெள்ளகோவில் பகுதியில் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வாகனங்களில் திரண்டு வந்த 100 பெண்கள் உள்பட சுமார் 430 பேர் கரூர் சாலை, பகவதிபாளையம் அருகே கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் காங்கயம் நகரம், பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த காலை 10 மணிக்கு போராட்ட இடமான பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.