திருப்பூரில் 2 நாள்களில் ரூ.400 கோடி பின்னலாடை உற்பத்தி பாதிப்பு

திருப்பூரில் நூல் விலை உயர்வைக் கண்டித்து ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த நிறுவனங்கள்
திருப்பூரில் 2 நாள்களில் ரூ.400 கோடி பின்னலாடை உற்பத்தி பாதிப்பு

திருப்பூர்: திருப்பூரில் நூல் விலை உயர்வைக் கண்டித்து ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 2 ஆவது நாளாக ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்ததுடன், 2 நாள்களில் ரூ.400 கோடி பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகரில் உள்ள பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இதில், 90 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களாகும். இந்தத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுட்டு வருகின்றனர். 

திருப்பூரில் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக வெறிச்சோடிக் காணப்படும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள்.
திருப்பூரில் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக வெறிச்சோடிக் காணப்படும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள்.

பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மூலமாக ஆண்டுக்கு சுமார் ரூ.65 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் அனைத்து ரக நூல்களுக்கு கிலோ ரூ.70 உயர்த்தப்பட்டதால் தொழில் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதையடுத்து, திருப்பூரில் உள்ள தொழில் அமைப்புகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மே 16,17 ஆம் தேதிகளில் உற்பத்தி நிறுத்தப் போராட்டதை அறிவித்திருந்தது. இதில் பஞ்சு, நூல் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். பருத்தியை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். பஞ்சு பதுக்களைக் கட்டுப்படுத்தி செயற்கை விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நூற்பாலைகள் மே மாதத்தில் உயர்த்தப்பட்ட நூல் விலை உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதன்படி, திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை 2 ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதன் மூலமாக ஒரு நாளுக்கு தலா ரூ.200 கோடி என 2 நாள்களில் ரூ.400 கோடி பின்னலாடை உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்: பின்னலாடைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டுள்ளனர். இதில், பல்வேறு தொழில் அமைப்புகள், தொழிற்சங்க நிர்வாகிகளும், தொழிலாளர்களும் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com