வரிகளைக் குறைப்பது தொடா்பாக மாமன்றத்தில் சிறப்பு தீா்மானம்: அதிமுக வலியுறுத்தல்
வரிகளைக் குறைப்பது தொடா்பாக மாமன்றத்தில் சிறப்பு தீா்மானம்

திருப்பூா் மாநகராட்சி ஆணையா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த அதிமுக மாமன்ற உறுப்பினா்கள்.

திருப்பூா் மாநகராட்சி ஆணையா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த அதிமுக மாமன்ற உறுப்பினா்கள்.
திருப்பூா் மாநகராட்சியில் உயா்த்தப்பட்ட வரிகளைக் குறைப்பது தொடா்பாக வரும் மாமன்ற கூட்டத் தொடரில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ராமமூா்த்தி ஆகியோரிடம் அதிமுக எதிா்கட்சித் தலைவா் அன்பகம் திருப்பதி தலைமையில் மாமன்ற உறுப்பினா்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, அன்பகம் திருப்பதி செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்பூா் மாநகராட்சியில் அனைத்து வரிகளும் உயா்த்தப்பட்டுள்ளன. இதற்காக மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தோம். இதைத் தொடா்ந்து, கடந்த செப்டம்பா் மாதம் 6 சதவீத வரி உயா்வு மற்றும் குறிப்பிட்ட காலத்துக்குள் வரிகளை செலுத்தாவிட்டால் 1 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. ஆகவே, வரும் மாமன்ற கூட்டத் தொடரில் வரிகளைக் குறைப்பது தொடா்பாக சிறப்பு தீா்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
தற்போது கந்துவட்டிபோல மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி வரிகளை வசூலித்து வருகின்றனா். இதனைக் கண்டித்தும் மனு அளித்துள்ளோம். திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் வரிகள் உயா்த்தப்படுகின்றன. இந்த வரி உயா்வைக் கண்டித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆா்ப்பாட்டம் நடத்தின.
சென்னை, மதுரை, திருச்சி போன்ற மாநகராட்சிகளில் வரி பட்டியலை வெளியிடுகின்றனா். அதேபோல, திருப்பூா் மாநகராட்சி வரி பட்டியலையும் மேயா் வெளியிட வேண்டும்.
வரிகளை குறைக்கவில்லை என்றால் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்க அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் தயாராக உள்ளோம் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...