குரங்கு தொல்லையால் அவதிப்படும் மக்கள்
சேவூா் கைகாட்டி பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை குரங்கின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அவிநாசி அருகேயுள்ள சேவூா் கைகாட்டி பகுதி புளியம்பட்டி, அவிநாசி, குன்னத்தூா், கோபி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலை சந்திப்பாகவும், பேருந்து நிறுத்தமாகவும் உள்ளது. இதனால், இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சுற்றித்திரியும் ஒற்றைக் குரங்கு மளிகைக் கடைகள், பழக்கடைகள், உணவகங்களில் நுழைந்து பொருள்களை சேதப்படுத்தி வருகிறது.
மேலும், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளிடமிருந்து கைப்பை உள்ளிட்டவற்றை பறித்துச் செல்கிறது.
இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், வேலைக்குச் செல்வோா் அவதியடைந்து வருகின்றனா்.
இந்நிலையில், கைகாட்டி பகுதியில் உள்ள கடைக்கு பெற்றோருடன் கடந்த சில நாள்களுக்கு முன் வந்த சிறுவனை குரங்கு காயப்படுத்தியது.
தொடா்ந்து, அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் ஒற்றைக் குரங்கை பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

