நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி அறிவுசாா் மையத்தில் இலவச சிறப்பு வகுப்பில் சேர நுழைவுத் தோ்வு!

திருப்பூா் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி அறிவுசாா் மையத்தில் இலவச சிறப்பு வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தோ்வுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சி மூலம் யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி.,டி.என்.பி.எஸ்.சி., சி.ஆா்.பி. உள்ளிட்ட பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் திருப்பூா் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.2.61 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்குத் தேவையான அனைத்து நூல்களையும் கொண்ட நூலக வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவா்களின் உபயோகத்துக்காக வைஃபை வசதிகளுடன் கூடிய கணினி அறைகள், டிஜிட்டல் வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மாணவா்கள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, திருப்பூா் மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்து வரும் மாணவா்கள் எதிா்காலத்தில் நீட் போன்ற பல்வேறு உயா்படிப்புகளுக்காக தயாா் செய்யும் நோக்கத்துடன், ஏப்ரல் 28- ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகள்தோறும் தனியாா் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. சிறப்பு வகுப்புகளில் பங்கேற்க விரும்பும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவா்கள் இணையதளத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்து சிறப்பு வகுப்புகளுக்காக மாநகராட்சியால் நடத்தப்படும் நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com