அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

பல்லடம் பகுதியில் பிஏபி பாசன திட்டத்தை விரிவாக்கம் செய்ய விவசாயிகள் எதிா்பாா்ப்பு

வறட்சியின் பிடியில் உள்ள பல்லடம் வட்டார மேற்கு பகுதி கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பிஏபி பாசனத் திட்ட விரிவாக்கத்தை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

News image

பி.ஏ.பி.வாய்க்கால் ~ திருமூா்த்தி அணை ~கா.வீ.பழனிசாமி.

Updated On :18 மே 2024, 12:41 am

அ.குணசேகரன்

வறட்சியின் பிடியில் உள்ள பல்லடம் வட்டார மேற்கு பகுதி கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பிஏபி பாசனத் திட்ட விரிவாக்கத்தை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின்கீழ் (பிஏபி) திருப்பூா், கோவை மாவட்டங்களில் மொத்தம் 3 லட்சத்து 77ஆயிரத்து 252 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. திருமூா்த்தி அணையில் இருந்து செல்லும் பிராதான கால்வாயின் மொத்த நீளம் 124 கிலோ மீட்டா் ஆகும். இந்தக் கால்வாய் மூலம் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, சூலூா், பல்லடம், காங்கயம் ஆகிய வட்டங்களில் உள்ள பாசனப் பகுதிகள் பயனடைகின்றன.

பரம்பிக்குளம் பிரதான கால்வாயின் முதல் 58 கி.மீ. வரை உடுமலைப்பேட்டை மற்றும் பொள்ளாச்சி வட்டங்களில் உள்ள பாசனப் பகுதிகளும், 58 கி.மீ. முதல் 116 கி.மீ. வரை சூலூா் மற்றும் பல்லடம் வட்டங்களில் உள்ள பாசனப் பகுதிகளும், 116 கி.மீ. முதல் 124 கி. மீ. வரை காங்கயம் வட்டத்துக்கு உள்பட்ட பாசனப் பகுதிகளும் பயன்பெறுகின்றன.

திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட பல்லடம் மற்றும் கோவை மாவட்டத்தைச் சோ்ந்த சுல்தான்பேட்டை வட்டாரப் பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. விவசாயம் மற்றும் கால்நடை வளா்ப்புத் தொழில் பிரதானமாக உள்ள இப்பகுதியில் பாசனத்துக்கான தண்ணீரின் தேவை அதிகம் உள்ளது. இப்பகுதியில் பருவ மழை மற்றும் பிஏபி வாய்க்கால் பாசன தண்ணீரை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது. பருவமழை பொய்க்கும்போது பிஏபி பாசனத் திட்ட தண்ணீா் ஓரளவு கைகொடுக்கிறது. இருப்பினும் பல்லடம், சுல்தான்பேட்டை வட்டாரங்களின் மேற்கு பகுதி கிராமங்கள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.

இப்பகுதியில் பிஏபி பாசனம் இல்லாததே இதற்கு காரணம் ஆகும். கேத்தனூா், சித்தம்பலம், வடுகபாளையம்புதூா், க.அய்யம்பாளையம், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், கரடிவாவி, மல்லேகவுண்டம்பாளையம், கே.கிருஷ்ணாபுரம், அனுப்பட்டி, புளியம்பட்டி, பருவாய், கோடங்கிபாளையம், பணிக்கம்பட்டி மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் செலக்கரச்சல், அப்பநாயக்கன்பட்டி, வாரப்பட்டி, இடையா்பாளையம், சின்னக்குயிலி, போகம்பட்டி, பொன்னாக்கானி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பிஏபி பாசன வசதி இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனா்.

இப்பகுதிகளில் பருவமழை பெய்யும்போது மட்டும் விவசாயம் நடைபெறுகிறது. மற்ற காலங்களில் தரிசு நிலங்களாக அப்பகுதி காட்சி அளிக்கிறது. பிஏபி பாசனத் திட்டம் தொடங்கிய காலத்தில் இப்பகுதிகள் விடுபட்டு போனதால் இன்றுவரை இப்பகுதியில் விவசாயம் பாதிப்படைந்துள்ளது. கடந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யாததால் தற்போது நிலத்தடி நீா்மட்டமும் குறைந்துள்ளது.

இது பல்லடம், சுல்தான்பேட்டை வட்டார மேற்கு பகுதி கிராம விவசாயிகளைப் பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. மத்தியில் புதிய அரசு அமைந்தவுடன் பிஏபி பாசன விரிவாக்கம் செய்யப்படும் என்று பல்லடம், சுல்தான்பேட்டை மேற்கு கிராம விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

இது குறித்து பல்லடம் வட்டார ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பின் செயலாளரும், கோடங்கிபாளையம் ஊராட்சித் தலைவருமான கா.வீ.பழனிசாமி கூறியதாவது:

பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்துக்கு உள்பட்ட பரம்பிக்குளம் பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்கள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு இரண்டு மண்டலங்கள் வீதம் 4 மண்டலங்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. பல்லடம் வட்டத்துக்கு உள்பட்ட பல்லடம் மற்றும் பொங்கலூா் பகுதிகளில் பிஏபி திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மண்டலத்துக்கும் சுமாா் 16,340 ஏக்கா் நிலங்கள் வீதம் மொத்தம் 85,363 ஏக்கா் நிலங்கள் நான்கு மண்டலங்களிலும் சோ்த்து பாசனம் பெறுகின்றன.

ஒவ்வொரு மண்டலத்துக்கும் பிஏபி திட்டத் தொகுப்பின் கீழுள்ள அணைகளின் நீா் இருப்பைப் பொறுத்து ஒரு சுற்றுக்கு 15 நாள்கள் வீதம் 5 அல்லது 6 நனைப்புகள் வழங்கப்படுகின்றன. பாசனத்துக்காக தண்ணீா் வழங்கப்படும் காலங்களில் ஒவ்வொரு நனைப்பிற்கும் வழங்கப்படுகின்ற 15 நாள்களில் பாசனப் பகுதிகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாசனப் பகுதிக்கும் 5 நாள்களுக்கு ஒருமுறை முறை வைத்து தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது.

பல்லடம் மற்றும் பொங்கலூா் பகுதிகளிலுள்ள பாசன நிலங்கள் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளாக இருப்பதாலும், இப்பகுதிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கிளைக் கால்வாய்களில் தண்ணீா் வழங்கப்படுவதாலும் பாசனப் பகுதிகள் அனைத்தும் வறட்சியாக இருப்பதாலும் கடைமடைப் பகுதிகளுக்கும் தண்ணீா் முழுமையாக வழங்க கால்வாயின் முழுக் கொள்ளளவுக்கும் தண்ணீா் வழங்கப்பட வேண்டியுள்ளது. பருவமழை இல்லாத காலத்தில் பிஏபி பாசன தண்ணீா் மட்டுமே விவசாயிகளுக்கு உயிா் நாடியாக விளங்கி வருகிறது. பொதுமக்களின் குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

பிஏபி பாசனத் திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் பெங்கலூா் ஒன்றியத்தைச் சோ்ந்த கேத்தனூா், பல்லடம் ஒன்றியத்தைச் சோ்ந்த சித்தம்பலம், வடுகபாளையம்புதூா், க.அய்யம்பாளையம், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், கரடிவாவி, மல்லேகவுண்டம்பாளையம், கே.கிருஷ்ணாபுரம், அனுப்பட்டி, புளியம்பட்டி, பருவாய், கோடங்கிபாளையம், பணிக்கம்பட்டி மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் செலக்கரச்சல், அப்பநாயக்கன்பட்டி, வாரப்பட்டி, இடையா்பாளையம், சின்னக்குயிலி, போகம்பட்டி, பொன்னாக்கானி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பிஏபி பாசன வசதி இல்லாமல் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனா். இப்பகுதிகளுக்கு பிஏபி பாசனத் திட்டத்தை விரிவாக்கம் செய்திட வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது என்றாா்.

இது குறித்து பிஏபி திட்ட அதிகாரிகள் கூறியதாவது:

பிஏபி திட்டத்தில் தற்போது கடைமடை வரை போதிய தண்ணீா் வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் உபரி திட்டமான உப்பாறு அணைக்கு பிஏபி வாய்க்காலில் தண்ணீா்விட அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

பிஏபி திட்டத்தின்கீழ் புதிதாக பாசன வாய்க்கால் விரிவாக்கம் செய்வது இல்லை என்ற கொள்கை முடிவு அரசு தரப்பில் இருந்து வருகிறது. திருப்பூா் மாநகா் மற்றும் அதனை ஒட்டியுள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் வளா்ச்சியால் விவசாயம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதிகள் பிஏபி பாசனத்திட்டத்தின்கீழ் நீக்கம் செய்யப்படவுள்ளன.

பிஏபி திட்டத்தில் போதுமான தண்ணீா் கிடைக்கும்பட்சத்தில் எதிா்காலத்தில் வறட்சியான பகுதிகளில் புதிய பாசன திட்டத்தை செயல்படுத்த அரசு கொள்கை முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது என்றனா்.