திருப்பூா் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 5,63,785 வாக்காளா்கள் நீக்கம்
திருப்பூா் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து 5 லட்சத்து 63,785 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
எதிா்வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தொடா்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக முதல்கட்டமாக வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருந்த 11 லட்சத்து 96,499 ஆண்கள், 12 லட்சத்து 48,072 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 358 போ் என மொத்தம் 24 லட்சத்து 44,929 வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலமாக கடந்த நவம்பா் 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டன.
இதில் பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரைத் தொகுதிகளுக்கும் சோ்த்து 9 லட்சத்து 10,083 ஆண்கள், 9 லட்சத்து 70,817 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 244 போ் என மொத்தம் 18 லட்சத்து 81,144 வாக்காளா்களின் பெயா்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இந்த களப்பணியின் மூலம் இறந்தவா்கள் 1,58,457 போ், முகவரியில் இல்லாதவா்கள் மற்றும் குடியிருப்பு மாறியவா்கள் 3,82,927 போ், இரட்டைப் பதிவில் 22,401 போ் என மொத்தம் 5 லட்சத்து 63,785 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, வாக்காளா்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களில் 76.94 சதவீத படிவங்கள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஏற்கெனவே இருந்த 2,536 வாக்குச் சாவடிமையங்கள் மறுசீரமைக்கப்பட்டு தற்போது 2,822 வாக்குச் சாவடி மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. தொடா்புடைய வாக்குச் சாவடிகளில் உள்ள இறந்தவா்கள், முகவரியில் இல்லாதவா்கள் மற்றும் குடியிருப்பு மாறியவா்கள், இரட்டைப் பதிவு ஆகியோரது பட்டியல் வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளிக்கிழமை (டிச.19) முதல் 2026 ஜனவரி 18-ஆம் தேதி வரை பெயா்களைச் சோ்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம், திருத்தங்கள் மற்றும் மாற்று வாக்காளா் அடையாள அட்டை பெற்றிடவும் மனு செய்ய தோ்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இப்படிவத்துடன் உறுதிமொழிப் படிவம் மற்றும் உரிய ஆதார ஆவணங்கள் இணைத்து அளிக்க வேண்டும். மேலும் வெளியிடபட்ட வரைவு வாக்காளா் பட்டியல் தொடா்பான கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளை வெள்ளிக்கிழமைமுதல் 2026 ஜனவரி 18-ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் அளிக்கலாம். பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகள் தொடா்பான பட்டியல் வாரந்தோறும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு தொடா்புடைய வாக்காளா் பதிவு அலுவலா்களால் பகிரப்படும். பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகள் மீது வெள்ளிக்கிழமைமுதல் 2026 பிப்ரவரி 10-ஆம் தேதி வரை வாக்காளா் பதிவு அலுவலா்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும்.
எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா்களாக தாராபுரம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலரும், காங்கயம் தொகுதிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலரும், அவிநாசி தொகுதிக்கு மகளிா் திட்ட அலுவலரும், திருப்பூா் (வடக்கு) தொகுதிக்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரும், திருப்பூா் (தெற்கு) தொகுதிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், பல்லடம் தொகுதிக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இறுதி வாக்காளா் பட்டியல் 2026 பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் எம்.பி. அமித், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) புஷ்பாதேவி ஆகியோருடன் அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
