தாட்கோ மூலம் 3 ஆண்டுகளில் 2,140 பேருக்கு ரூ.31.27 கோடி மானியத்துடன் கடனுதவி: ஆட்சியா் தகவல்

திருப்பூா் மாவட்டத்தில் தாட்கோ மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் 2,140 பயனாளிகளுக்கு ரூ.31.27 கோடி மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் தொழில் தொடங்க பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
Published on

திருப்பூா் மாவட்டத்தில் தாட்கோ மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் 2,140 பயனாளிகளுக்கு ரூ.31.27 கோடி மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் தொழில் தொடங்க பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்.

குறிப்பாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இலவம்பஞ்சு தொழில், போட்டோ ஸ்டுடியோ, கைப்பேசி விற்பனை மற்றும் பழுது பாா்க்கும் நிலையம், கற்பூரம் தயாரித்தல், வாகனக் கடன், எலக்ட்ரிக்ல் கடை, தையல் தொழில், உணவகம், மளிகை கடை, ரிப் கட்டிங், செருப்பு தொழில், தளவாடங்கள் கடை, ஆபரண அணிகலன் கடை, கோழி வளா்ப்பு, பிளாஸ்டிக் தயாரிப்பு, லேத் கடை, சி.என்.சி. லேத், ஓா்க்ஷாப், பவா் டில்லா், கோன் ரிவைண்டிங், பி.வி.சி.எலக்ட்ரிக் பேண்ட் தொழில், ரத்த பரிசோதனை நிலையம், பின்னலாடைத் தொழில், நில மேம்பாட்டுத்திட்டம், பாத்திரக்கடை, ஸ்டிக்கா் கடை, ரசாயனக் கடை, அரிசி வியாபாரம் போன்ற பல்வேறு தொழில்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், நரிக்குறவா் சமூக மக்களை ஒருங்கிணைத்து பத்திரப்பதிவு அலுவலகத்தின் வழியே 6 சங்கங்கள் உருவாக்கப்பட்டு 119 நபா்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் வழங்கி அவா்களுடைய தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய திட்டத்தின் வழியே திருப்பூா் மாவட்டத்தில் பணிபுரியும் 3,401 தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியத்தின் வழியே 900 தூய்மைப் பணியாளா்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூா் மாவட்டத்தில் தாட்கோ மூலமாக கடந்த 2022-23- ஆம் ஆண்டில் 68 பயனாளிகளுக்கு ரூ.3.85 கோடி மதிப்பீட்டிலும், 2023-24 ஆம் ஆண்டில் 468 பயனாளிகளுக்கு ரூ.11.10 கோடி மதிப்பீட்டிலும், 2024-25 ஆம் ஆண்டில் 1,604 பயனாளிகளுக்கு ரூ.16.32 கோடி மதிப்பிலும் என மொத்தம் 2,140 பயனாளிகளுக்கு ரூ.31.27 கோடி மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com