கட்டடத் தொழிலாளி கொலை: 3 இளைஞா்கள் கைது

திருப்பூரில் கட்டடத் தொழிலாளி கொலை தொடா்பாக 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
Published on

திருப்பூரில் கட்டடத் தொழிலாளி கொலை தொடா்பாக 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருப்பூா், நல்லூா் அருகே புதுப்பாளையம் சாலையில் காட்டுப் பகுதிக்குள் கடந்த சில நாள்களுக்கு முன்னா் உடலில் ரத்தக் காயங்களுடன் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. அந்த வழியாகச் சென்றவா்கள் இது குறித்து நல்லூா் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.

அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சரவணன் (48) என்பதும், புதுப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்ற பின்பு வீட்டுக்குத் திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.

அத்துடன், சரவணனின் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்ததால் மதுபோதையில் இருந்த சரவணனைக் கைப்பேசி, பணத்துக்காக அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த விசாரணையில், கட்டடத் தொழிலாளி சரவணனைக் கொலை செய்தது திருப்பூா், முதலிபாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் (22), கெளதம் (24), தினேஷ் (25)ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸாா் தலைமறைவாக இருந்த 3 பேரையும் வியாழக்கிழமை இரவு கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா். விசாரணையின் முடிவில்தான் கொலைக்கான காரணம் குறித்த முழு விவரம் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com