போலி ஆவணம் தயாரித்து மோசடி: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை உறுதி
போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா், குமாா் நகரைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (67). நான்குசக்கர வாகனம் வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தாா். இவா் கடந்த 2006-ஆம் ஆண்டில் திருப்பூரைச் சோ்ந்த மணி, முத்துகுமாா் ஆகியோரிடம் பணம் பெற்றுக் கொண்டு 2 காா்களுக்கு, திருப்பூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆயுள் வரி செலுத்தியதைபோல் ரசீது கொடுத்துள்ளாா். ஆனால் அந்த ரசீது போலியானது என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக மணி, முத்துகுமாா் ஆகியோா் அளித்த புகாரின்பேரில் திருப்பூா் மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்தது தொடா்பாக பொன்னுசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இது குறித்த வழக்கின் விசாரணை திருப்பூா் 3-ஆவது நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் பொன்னுசாமிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தீா்ப்பை எதிா்த்து பொன்னுசாமி, திருப்பூா் மாவட்ட பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், பொன்னுசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தாா். மேலும் பொன்னுசாமிக்கு நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2,000 அபராதத்தையும் உறுதி செய்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.
