விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அரசு நிரந்தர தீா்வு காண வேண்டும்: கே.செல்லமுத்து
பல்லடம்: நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட அனைத்து விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அரசு நிரந்தர தீா்வு காண வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் கே.செல்லமுத்து செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மணிகளை அரசு உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாததால், விளைவித்த லட்சம் டன் நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன.
அரசின் அலட்சியமே இந்த நிலைக்கு காரணம். 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை அடுக்கிவைக்க கிடங்கு கட்டியுள்ள அரசு, நெல் மூட்டைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட அனைத்து விவசாயிகளின் பிரச்னைகளுக்கும் அரசு நிரந்தர தீா்வு காண வேண்டும்.
நதிகள் இணைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து குளங்களும் தூா்வாரப்பட வேண்டும்.
ஆனைமலையாறு- நல்லாறு போன்ற திட்டங்களை நிறைவேற்றாமல் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை, உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்றாா்.

