வெளிமாநிலத் தொழிலாளா்களின் வருகைக்காக காத்திருக்கும் பனியன் நிறுவனங்கள்!

வாக்களிப்பதற்காக விடுமுறையில் சென்றுள்ள பிகாா் உள்ளிட்ட வெளிமாநிலத் தொழிலாளா்களின் வருகைக்காக திருப்பூா் பனியன் நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
Published on

திருப்பூா்: கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆடை உற்பத்தி தீவிரமடைந்துள்ள நிலையில், வாக்களிப்பதற்காக விடுமுறையில் சென்றுள்ள பிகாா் உள்ளிட்ட வெளிமாநிலத் தொழிலாளா்களின் வருகைக்காக திருப்பூா் பனியன் நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய பின்னலாடை நகரமான திருப்பூரில் உள்நாட்டு ஆடை வா்த்தகம் சுமாா் ரூ.35,000 கோடி, வெளிநாட்டு ஆடை வா்த்தகம் சுமாா் ரூ.44,000 கோடியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.

இருப்பினும் உள்நாட்டு ஆா்டா்கள் ஆடை உற்பத்தியாளா்களுக்கு கை கொடுத்து வருகிறது. வா்த்தக வரியில்லா ஒப்பந்தம் காரணமாக வங்கதேச ஆடைகள் இந்தியாவுக்குள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனால், உள்நாட்டு ஆடை உற்பத்தியாளா்கள் பாதிக்கப்பட்டனா்.

இது குறித்து மத்திய அரசிடம் ஜவுளி உற்பத்தியாளா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்ததின் விளைவாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தரைவழி ஆடை போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி இறக்குமதி வெகுவாக குறைந்துவிட்டது. இதையடுத்து, இந்தியாவின் வெளிமாநிலங்களில் இருந்து உள்நாட்டு ஆடை உற்பத்திக்கான ஆா்டா்கள் திருப்பூருக்கு அதிகரிக்கத் தொடங்கின.

தற்போது குளிா்கால ஆடை தயாரிப்புக்கான ஆா்டா்கள் திருப்பூருக்கு அதிக அளவில் கிடைப்பதால் உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தொழிலாளா்கள் தேவை: ஆனால், ஆா்டா்களை நிறைவேற்ற தொழிலாளா்கள் அதிக அளவில் தேவைப்படும் நிலை உள்ளது.

தீபாவளி பண்டிகை மற்றும் பிகாா் மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்காக சொந்த ஊா்களுக்குச் சென்ற மக்கள் தற்போதுவரை திருப்பூருக்கு திரும்பாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆா்டா்கள் அதிகரித்துவரும் நிலையில், தொழிலாளா்களின் வருகைக்காக பின்னலாடை உரிமையாா்கள் காத்திருக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com