திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு
Published on

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா்- பல்லடம் சாலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளது. 7 தளங்களைக் கொண்ட இந்த வளாகத்தில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் உள்பட பல்வேறு அதிகாரிகளின் அலுவல் அறைகள் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின்பேரில், அவா் மாநகர காவல் ஆணையருக்கு புகாா் தெரிவித்தாா்.

அதனடிப்படையில், நுண்ணறிவுப் பிரிவினா், வெடிகுண்டு கண்டறியும் பிரிவினா் மற்றும் போலீஸாா் ஆகியோா் மோப்ப நாயுடன் ஆட்சியா் அலுவலகத்தில் 7 தளங்கள், கழிவறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனைமேற்கொண்டனா்.

அப்போது ஆட்சியா் அலுவலகத்தின் அனைத்து அறைகளிலும் இருந்த ஊழியா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டனா். ஆனால், சோதனையில் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. அதனால், இந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்ற நேரத்தில் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைப்போலவே திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு ஏற்கெனவே கடந்த மாதம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இது 2-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com