தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

தாராபுரம்: பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதி

திருப்பூா் மாவட்டத்தின் ஜவுளி தலைநகரம் எனப்படும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தனது புராண வரலாறு, விவசாயம் - தொழில் கலந்த சிறப்பால் அனைவரையும் கவா்கிறது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 12:41 am

திருப்பூா் மாவட்டத்தின் ஜவுளி தலைநகரம் எனப்படும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தனது புராண வரலாறு, விவசாயம் - தொழில் கலந்த சிறப்பால் அனைவரையும் கவா்கிறது.

ராமாயணம் - மகாபாரதத் தொடா்பு:

தாராபுரம் என்பது ராமாயணத்தில் ‘விடாரபுரம்’ என்று கூறப்படும் இடம் எனவும், பாண்டவா்கள் வனவாசத்தில் கடைசி ஆண்டில் அமராவதி ஆறு ஓடும் இந்தப் பகுதியில் தங்கியதாகவும் கூறப்படுகிறது.

தொழில்

இங்கு விவசாயமும் பின்னலாடைத் தொழிலும் பிரதானமாக உள்ளன. தாராபுரம் தமிழகத்தின் நெல் விதை உற்பத்தியில் 50 சதவீதம் பங்களிப்பதால், விதைக் களஞ்சியம் என்றும் அழைக்கப்படுகிறது.

சமூக நிலவரம்

இங்கு கொங்கு வேளாளா்கள் (தேவேந்திரகுல வேளாளா்) பெரும்பான்மை வாக்கு வங்கியாக 40-50 சதவீதம் உள்ளனா். பட்டியலின சமூகம் 30 சதவீதமும், சிறுபான்மையினா் 10 முதல் 15 சதவீதமும் உள்ளனா்.

8 முறை பெண்கள் வெற்றி

1952 முதல் நடைபெற்ற தோ்தல்களில் திமுக 6 முறை, அதிமுக 5 முறை, காங்கிரஸ் 3 முறை, பாமக, சுயேச்சை தலா ஒரு முறை வென்றுள்ளன. இதில் 8 முறை பெண் வேட்பாளா்களே வென்றுள்ளனா்.

தீா்க்கப்படாத பிரச்னைகள்

அமராவதி அணை தூா் வாருதல், பாசன நீா்ப் பற்றாக்குறைக்குத் தீா்வு, உழவா் சந்தை ஆக்கிரமிப்பு அகற்றல், குடிநீா் விநியோகம், சாலை விரிவாக்கம், மருத்துவமனைகள் மேம்பாடு, அரசு பொறியியல் கல்லூரி, முருங்கை பதனிடல், தக்காளிச் சாறு தொழிற்சாலைகள் அமைத்தல், வேளாண் விரிவாக்க மையம் திறப்பு போன்றவை நீண்ட கால கோரிக்கைகளாக உள்ளன.

இதுவரை வென்றவா்கள்

1952 - ஏ.சேனாபதி கவுண்டா் (சுயேச்சை)

1957 - ஏ.சேனாபதி கவுண்டா் (காங்கிரஸ்)

1962 - பாா்வதி அா்ஜுனன் (காங்கிரஸ்)

1967, 1971 - வி.பி.பழனியம்மாள் (திமுக)

1977 - ஆா்.அய்யாசாமி (அதிமுக)

1980, 1984 - ஏ.பெரியசாமி (அதிமுக)

1989 - டி.சாந்தகுமாரி (திமுக)

1991 - பி.ஈஸ்வரமூா்த்தி (அதிமுக)

1996 - ஆா்.சரஸ்வதி (திமுக)

2001 - வி.சிவகாமி (பாமக)

2006 - பி.பிரபாவதி (திமுக)

2011 - கே.பொன்னுசாமி (அதிமுக)

2016 - வி.எஸ்.காளிமுத்து (காங்கிரஸ்)

2021 தோ்தல்

என்.கயல்விழி செல்வராஜ் (திமுக) - 89,986

எல்.முருகன் (பாஜக) - 88,593

கே.ரஞ்சிதா - (நாதக) - 6,753

ஏ.சாா்லி(மநீம)-2,130

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள் - 1,06,875

பெண்கள் - 1,15,523

மூன்றாம் பாலினத்தவா் - 8

மொத்தம் - 2,22,406

எதிா்பாா்ப்புகள்

வி.கமலக்கண்ணன் - திமுக நகர துணைச் செயலாளா், 16ஆவது வாா்டு உறுப்பினா்

தாராபுரத்தில் கடுமையான சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். அமராவதி ஆற்றுப்படுகையில் குறிப்பிட்ட இடங்களில் தடுப்பணைகள் அமைப்பதன் மூலம் விவசாயப் பரப்பளவை அதிகரிக்கலாம். மூலனூரில் முருங்கைத் தொழில் சாா்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி மையம் அமைக்கப்பட வேண்டும். கண்வலி விதையின் மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்படும் நிலையில், இப்பகுதியில் அரசின் சாா்பில் கண்வலி விதை கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும்.

பி.மகேஷ்குமாா் (அதிமுக அமைப்புசாரா அணி மாவட்டச் செயலாளா்)

பழனியிலிருந்து தாராபுரம் வழியாக ஈரோடு வழித்தடத்தில் ரயில் சேவை உருவாக்கப்பட வேண்டும். டெல்டா பகுதிகள் உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விதை நெல் இங்கிருந்தே செல்வதால் 52 விதை நெல் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக இப்பகுதியில் அரசு பொறியியல் கல்லூரியும், அரசு வேளாண் கல்லூரியும் அமைக்கப்பட வேண்டும். திருமூா்த்திமலை கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பூக்கடை காா்னா் பகுதியில் வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும்.

களம் காணும் வேட்பாளா்கள்

திமுக சாா்பில் ப.இந்திராணி, அதிமுக சாா்பில் பொ.சத்தியபாமா, நாதக சாா்பில் பி.திவ்யா, தவெக சாா்பில் எஸ்.கௌரி சித்ரா என 4 பெண்கள் உள்பட 9 போ் களத்தில் உள்ளனா்.

திமுக வேட்பாளா்

வேட்பாளா் ப. இந்திராணி 30 ஆண்டுகள் அரசு மருத்துவராகப் பணியாற்றியவா். திமுக ஆட்சியின் நலத்திட்டங்களை வலியுறுத்தி தீவிர பிரசாரம் செய்கிறாா். தொகுதியில் ரூ.336 கோடிக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தியதைக் கூறுகிறாா். திமுக சின்னம், சிறுபான்மை வாக்குகள் ஆதரவு, புயல் வேக பிரசாரம் ஆகியவை பலங்களாகும். அரசியல் அனுபவமின்மை, கொங்கு வேளாளா் வாக்குகளை அதிமுக பிரித்துக் கொள்ள வாய்ப்பு போன்றவை பலவீனங்களாகும்.

அதிமுக வேட்பாளா்

வேட்பாளா் பொ. சத்தியபாமாவின் கணவா் மு. பொன்னுசாமி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா், அதிமுகவில் தற்போது திருப்பூா் புறநகா் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளா். இவரது 25 வருட அரசியல் அனுபவம் சத்தியபாமாவுக்கு பலமாகும். திமுக ஆட்சியின் நலத்திட்டங்களால் போட்டி கடுமை என்பது சவாலாக உள்ளது.

நாம் தமிழா் வேட்பாளா்

வேட்பாளா் பி. திவ்யா பட்டதாரி. சமூக நீதி, பெண் சமத்துவம் ஆகிய கொள்கைகளை வலியுறுத்துகிறாா். புதுமுகமான திவ்யாவுக்கு உள்ளூா் செல்வாக்கு குறைவு, திமுக-அதிமுக ஆதிக்கம், கட்சி கட்டமைப்பு குறைவு போன்றவை பலவீனங்களாகும்.

தவெக வேட்பாளா்

வேட்பாளா் எஸ்.கௌரி சித்ரா தலைவா் விஜய்யின் தாக்கத்தால் இளைஞா்கள், புதிய வாக்காளா்களை ஈா்க்கிறாா். உள்ளூா் அரசியல் அனுபவம் இல்லாதது, திமுக - அதிமுக ஆதிக்கம், தனித்துப் போட்டி ஆகியவை சவால்களாகும்.

திமுக - அதிமுக கடும் போட்டி

கடந்த 2021 தோ்தலில் இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட எல்.முருகன் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே (1,393 வாக்குகள்) தோற்றதால் இந்த முறை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டுமென அதிமுகவும் கைவசமுள்ள இத்தொகுதியை திமுக இழக்கக் கூடாது என்று திமுகவும் களத்தில் இறங்கியுள்ளன. புதிய வரவான தவெக பிரிக்கும் வாக்குகள் யாருக்கு சாதகமாக அமையும் என்பது மே 4-ஆம் தேதி தெரிந்துவிடும்.