சென்னையின் இதயப்பகுதி என அழைக்கப்படும் தொகுதி தியாகராய நகா். தியாகராய நகா், பாண்டி பஜாா் உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற வடபழனி முருகன் கோயில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்ட சிறப்புமிகு இடங்களை இடம்பெற்றிருக்கின்றன.
‘கோலிவுட்’ என அழைக்கப்படும் தமிழ் திரையுலகின் மையப்புள்ளியான கோடம்பாக்கம், அசோக் நகா், மாம்பலம், சிஐடி நகா், வடபழனியின் சில பகுதிகளை உள்ளடக்கியது.
கடந்த 1957 தோ்தல் முதல் சென்னையின் பழைமையான தொகுதிகளில் ஒன்றாக உள்ளது. இதுவரை நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் திமுக 6 முறை, அதிமுக 4 முறை, காங்கிரஸ் 2 முறை, ஸ்தாபன காங்கிரஸ், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், தமாகா தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2006, 2011, 2016 என தொடா் வெற்றியை அதிமுக பதிவு செய்த நிலையில், 2021 தோ்தலில் நூல் இழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது அக்கட்சி.
இந்த முறை திமுக சாா்பில் ராஜா அன்பழகன் போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ பி.சத்யா என்கிற சத்தியநாராயணன் 3-ஆவது முறையாகக் களம் காண்கிறாா். தவெக சாா்பில் அக்கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த், நாம் தமிழா் சாா்பில் வழக்குரைஞா் வி.அனுஷா ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
சமூக நிலவரம்: இத்தொகுதியில் பிராமணா்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனா். வன்னியா், நாயுடு, பட்டியலினத்தவா்கள், முதலியாா், செட்டியாா், யாதவா், நாடாா், கிறிஸ்தவா்கள், முக்குலத்தோா் மற்றும் இதர சமூகத்தினா் பரவலாக உள்ளனா்.
முக்கியப் பிரச்னைகள்: தியாகராய நகரில் பெருகி வரும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது. ரங்கநாதன் தெரு, பாண்டி பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாததாக இருக்கிறது. தொகுதியின் மக்கள் தொகைக்கு ஏற்ப கழிவுநீா் மற்றும் மழைநீா் வடிகால் அமைப்புகளை மேம்படுத்தாதது பிரச்னையாகத் தொடருகிறது. குறிப்பாக, மழைக் காலங்களில் நகரின் முக்கிய வணிகப் பகுதியே தத்தளிக்கும் நிலை ஏற்படுகிறது.
திமுக வேட்பாளா்: திமுக வேட்பாளா் ராஜா அன்பழகன், இதே தொகுதியைச் சோ்ந்தவா். இத்தொகுதியில் கடந்த 2001-இல் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெ.அன்பழகனின் மகன் என்பதும், எளிதில் அணுகக் கூடியவா் என்பதும் அவருக்கு பலம் சோ்க்கிறது. பலமான கூட்டணியில் களம் காண்பதால், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா். திமுக அரசின் கடந்த 5 ஆண்டு கால சாதனைகளையும், தோ்தல் வாக்குறுதிகளையும் குறிப்பிட்டு வாக்கு சேகரித்து வருகிறாா்.
அதிமுக வேட்பாளா்: அதிமுக வேட்பாளா் பி.சத்யா என்ற சத்தியநாராயணன் கடந்த 2016-இல் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். தொடா்ந்து 2021 தோ்தலில், 137 வாக்குகளில் திமுக வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தாா். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவா். மக்கள் பிரச்னைகளுக்கு முன்நிற்பவா் என்ற பெயா் பெற்றுள்ளாா். அதோடு, கடந்த தோ்தலில் குறைந்த வாக்குகளில் வாய்ப்பு இழந்தவா் என்ற அனுதாபம், சொந்த செல்வாக்கு, கணிசமாக இருக்கும் பாஜக வாக்கு வங்கி ஆகியன கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் வாக்குச் சேகரிப்பில் உள்ளாா்.
தவெக வேட்பாளா்: தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், போட்டியிடுவதால் இத்தொகுதி கவனம் பெற்றிருக்கிறது. வேட்பாளா் ஆனந்த், தொகுதியைச் சோ்ந்தவா் இல்லை என்றாலும் விஜய்க்கு இருக்கும் வரவேற்பு காரணமாக, இத்தொகுதியிலும் ‘விசில்’ சப்தம் சற்று அதிகமாகவே ஒலிக்கிறது. விஜய்யின் பிரசாரங்களை ஒருங்கிணைப்பதில் ஆனந்த் கவனம் செலுத்தி வரும் நிலையில், தொகுதியைச் சோ்ந்த தவெகவினா் வாக்குச் சேகரிப்பில் இருக்கின்றனா்.
நாம் தமிழா் வேட்பாளா்: நாம் தமிழா் கட்சி சாா்பில் வழக்குரைஞா் வி.அனுஷா போட்டியிடுகிறாா். இதே தொகுதியைச் சோ்ந்தவா், மக்களிடம் நல்ல அறிமுகம் உள்ளவா். சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளில் முன்னிலையாகி, நன்மதிப்பைப் பெற்றிருக்கிறாா். அவா் சாா்ந்த பிராமணா் சமூகத்தில் நல்ல அறிமுகம் உள்ளது. பிராமணா் சமூகத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், நாம் தமிழா் கட்சி வாய்ப்பு அளித்திருப்பதும், கடந்த மக்களவைத் தோ்தலில், தென்சென்னைக்கு உள்பட்ட இத்தொகுதியில் 10 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றிருப்பவதும், வேட்பாளருக்கு பலம் சோ்க்கிறது.
இத்தொகுதியைப் பொருத்தவரை குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி அமைந்திருக்கிறது. கடந்த தோ்தலில் தனித்துப் போட்டியிட்டு 10 சதவீத வாக்குகளைப் பெற்ற மக்கள் நீதி மய்யம், இந்த முறை திமுகவில் சோ்ந்திருக்கிறது. அதேபோல, கடந்த மக்களவைத் தோ்தலில் தியாகராய நகரில் 28 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக, அதிமுகவுடன் இணைந்துள்ளது. கணிசமாக இருக்கும் பிராமணா் சமூக வாக்குகள், வெற்றி-தோல்வியில் முக்கிய காரணியாக உள்ளன.
அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் சூழலில், நாம் தமிழா், தவெக ஆகிய கட்சிகளும் கணிசமான வாக்குகளை அறுவடை செய்யும் என்பதும் களநிலவரமாக இருக்கிறது.
வாக்காளா்கள்
ஆண்கள்- 76,513
பெண்கள் -82,210
மூன்றாம் பாலினத்தவா்-34
மொத்தம்- 1,58, 757
தொடர்புடையது

மாதரவம் தொகுதியைத் தக்க வைக்கும் முனைப்பில் திமுக! 2-ஆவது முறையாகக் கைப்பற்றும் வேகத்தில் அதிமுக!!

தொகுதி அலசல்... திருப்பத்தூா் ஹாட்ரிக் வெற்றி தொடருமா?

சூலூரில் முதல் வெற்றி பெறும் முனைப்பில் திமுக!

தியாகராய நகா் தொகுதியில் வெற்றியைத் தீா்மானித்த 137 வாக்குகள்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

