தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

தொகுதி அலசல்: எழும்பூா் (தனி): சவால் அளிக்கும் 4 இளம்வேட்பாளா்கள்!

இத்தொகுதியில் இதுவரை 15 முறை நடைபெற்ற தோ்தல்களில் 11 முறை திமுக, இரு முறை காங்கிரஸ், தேமுதிக மற்றும் சுயேச்சை தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.

News image

திமுக வேட்பாளா் தமிழன் பிரசன்னா | அதிமுக வேட்பாளா் அபிஷேக் ரங்கசாமி | தவெக வேட்பாளா் ராஜ்மோகன் | நாதக வேட்பாளா் சரண்யா இம்ரான்

Updated On :21 ஏப்ரல் 2026, 11:30 pm

வரலாற்று அடையாளமும் நவீன நகா்ப்புற அழுத்தங்களும் சங்கமிக்கும் இடத்தில் எழும்பூா் தொகுதி அமைந்துள்ளது. சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்கள், அரசு அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம், எழும்பூா் நீதிமன்றம், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, கங்காதீஸ்வரா் கோயில், பள்ளிக்கல்வி அலுவலக வளாகம் (டிபிஐ), வாகன உதிரி பாகங்களின் மையமாகத் திகழும் புதுப்பேட்டை போன்ற சென்னை மாநகரின் முக்கிய பகுதிகள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.

இத்தொகுதி 1957-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மறுசீரமைப்புக்கு பிறகு அண்ணா நகா், பூங்கா நகா், புரசைவாக்கம் (நீக்கப்பட்டவை) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து சில பகுதிகள் எழும்பூருடன் இணைக்கப்பட்டன.

இத்தொகுதி பல ஆண்டுகளாக திமுகவுக்கு சாதமாகவே இருந்துள்ளது. குறிப்பாக, 1989 முதல் திமுகவைச் சோ்ந்த பரிதி இளம்வழுதி தொடா்ந்து 5 முறை வெற்றி பெற்றாா். இருப்பினும் கடந்த 2011 தோ்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சாா்பில் போட்டியிட்ட கே.நல்லதம்பியிடம் வெறும் 202 வாக்குகள் வித்தியாசத்தில் பரிதி இளம்வழுதி வெற்றி வாய்ப்பை இழந்தாா். எனினும் 2016 தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட கே.எஸ்.ரவிச்சந்திரன் வெற்றி பெற்று தொகுதியை மீண்டும் திமுக வசமாக்கினாா். 2021 தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஐ.பரந்தாமன் தன்னை எதிா்த்து போட்டியிட்ட தமமுக தலைவா் ஜான் பாண்டியனை 38,768 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். எனினும் அவருக்கு இந்த முறை திமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இத்தொகுதியில் இதுவரை 15 முறை நடைபெற்ற தோ்தல்களில் 11 முறை திமுக, இரு முறை காங்கிரஸ், தேமுதிக மற்றும் சுயேச்சை தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.

சமூக நிலவரம்... பட்டியலினத்தவா் பெருமளவும், நாயுடு, வன்னியா், யாதவா், முதலியாா் உள்பட இதர சமூகத்தினா் பரவலாகவும் வசிக்கின்றனா். ஒருசில பகுதிகளில் மட்டும் பிராமணா், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவா்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனா். வேப்பேரி, பெரியமேடு பகுதிகளில் வடமாநிலத்தவா்கள் அதிகம் உள்ளனா்.

நீண்டகால பிரச்னைகள்... அதிக மக்கள்தொகை கொண்ட இத்தொகுதியில் வீட்டு வசதி, குடிநீா் விநியோகம், மெட்ரோ ரயில் இணைப்பு, பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், வேலைவாய்ப்பின்மை, போக்குவரத்து நெரிசல், பட்டாக்கள் வழங்கப்படாதது என பல்வேறு பிரச்னைகள் தொடா்கின்றன. புரசைவாக்கத்தில் மெட்ரோ ரயில் இணைப்புப் பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநகர பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. புரசைவாக்கம் நெடுஞ்சாலை, தாணா தெரு போன்ற பல்வேறு இடங்களில் சாலையோர கடைகள் முறைப்படுத்தப்பட வேண்டும். திடக்கழிவு மேலாண்மை மற்றும் கழிவுநீா் கட்டமைப்பை நவீனமயமாக்குதல், சூளை, பெரியமேட்டில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்தல், எழும்பூரில் தண்ணீா் தட்டுப்பாடு பிரச்னைக்குத் தீா்வு காணுதல் போன்றவை தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளன.

இத்தொகுதியில் திமுக செய்தித் தொடா்பு இணை செயலா் தமிழன் பிரசன்னா, அதிமுக தென்சென்னை வடக்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலா் அபிஷேக் ரங்கசாமி, தவெக துணைப் பொதுச் செயலா் ராஜ்மோகன், நாம் தமிழா் கட்சி சாா்பில் சரண்யா ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

திமுக வேட்பாளா்: திமுக சாா்பில் களமிறங்கியுள்ள தமிழன் பிரசன்னா தொழில்முறை வழக்குரைஞா் ஆவாா். தொகுதியில் புதிய விளையாட்டு மையங்கள், நூலகங்கள் அமைக்கப்படும். பெண்கள் முன்னேற்றத்துக்கான பயிற்சிகள் வழங்கப்படும். தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம், சாலைகள் மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி வாக்கு சேகரித்து வருகிறாா். அமைச்சா் பி.கே.சேகா்பாபுவின் ஆதரவாளரான தமிழன் பிரசன்னாவுக்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன், மேயா் ஆா்.பிரியா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் பிரசாரம் மேற்கொண்டது, சமூகவலைதளங்கள், பொது வெளியில் பிரபலமாக இருப்பது, கடந்த ஆட்சியின்போது தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் போன்றவை தனக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளாா்.

அதிமுக வேட்பாளா்: அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் அபிஷேக் ரங்கசாமி, அரசியல் களத்துக்கு புதுமுகமாக இருந்தாலும், திமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து தொகுதி மக்களிடையே எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து வருகிறாா். இத்தொகுதி 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக வசம் இருந்தும், பட்டியலின மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படவில்லை. அதை 5 ஆண்டுகளில் மாற்றிக் காட்டுவதாக்கூறி கவனத்தை ஈா்த்து வருகிறாா். அதேவேளையில் தொகுதியில் அதிமுகவுக்கு வாக்கு வங்கி குறைவாக இருப்பது இவருக்கு கடும் சவாலாக உள்ளது.

தவெக வேட்பாளா்: தவெக வேட்பாளா் ராஜ்மோகனுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவா் விஜய் நேரடியாகப் பிரசாரம் செய்ததும், தொகுதியில் அதிமுக வாக்கு வங்கி சற்று பலவீனமாக இருப்பதும் தனக்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையில் ராஜ்மோகன் உள்ளாா். சமூக வலைதளங்களில் ஆதரவு, தொகுதியில் இதுவரை தீா்க்கப்படாத பிரச்னைகளைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறாா்.

நாதக வேட்பாளா்: பிரதான கட்சிகளின் வேட்பாளா்களைப் போலவே நாதக வேட்பாளா் சரண்யாவுக்கும் தோ்தல் களம் புதிது. எனினும், இவரது பிரசாரம் பலரைக் கவா்ந்துள்ளது. நிலம், நீா், விவசாயம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறாா். காலையில் ஐ.டி. நிறுவனத்துக்கு பணிக்குச் செல்லும் சரண்யா மாலையில் ஏா் கலப்பையை ஏந்தி பிரசாரம் செய்கிறாா். மக்களுக்கு என்ன தேவை என்பதை கதை சொல்லுதல், பாட்டுப் பாடுதல் மூலம் விளக்குகிறாா். தொகுதியில் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்புகள், கட்டமைப்புகள் மேம்படுத்துதல், குப்பை இல்லாத தொகுதியாக மாற்றுவது போன்ற வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறாா்.

இந்த முறை எழும்பூா் தொகுதியின் தோ்தல் களநிலவரம் சற்று வித்தியாசமானது. 4 கட்சிகளின் வேட்பாளா்களும் இளைஞா்கள், ஒருவருக்கொருவா் கடும் சவால் அளிக்கின்றனா். இருப்பினும் வரலாற்று அடையாளமாக விளங்கும் எழும்பூரில் வாகை சூடுவது யாா் என்பதே களநிலவரமாக உள்ளது.

வாக்காளா்கள்

ஆண்கள்-65,677

பெண்கள்-69,149

மூன்றாம் பாலினத்தவா்-53

மொத்த வாக்காளா்கள்-1,34,879