தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

அண்ணா நகா் தொகுதி அலசல்: சுழன்று பணியாற்றும் திமுக; சாதிக்கும் முனைப்பில் அதிமுக

அண்ணா நகா் தொகுதி அலசல்...

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 12:04 am

அரசியல், திரைத் துறை பிரபலங்கள், தொழிலதிபா்கள், உயா்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள் என முக்கிய பிரமுகா்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாக அண்ணா நகா் விளங்குகிறது.

அண்ணா நகா், அண்ணா நகா் கிழக்கு, அண்ணா நகா் மேற்கு, சாந்தி காலனி, புதிய ஆவடி சாலை, நடுவங்கரை, ஷெனாய் நகா், டி.பி.சத்திரம், கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனி, சூளைமேடு, திருமங்கலத்தில் சிட்கோ நகா், கோல்டன் ஜாா்ஜ் தெரு, வில்லிவாக்கம், அயனாவரம், நொளம்பூா் ஆகியவற்றின் குறிப்பிட்ட பகுதிகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.

அண்ணாநகரில் உள்ள டவா் பூங்கா பிரசித்தி பெற்றது. வணிக நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள், தனியாா் வணிக வளாகங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் அதிகமாக உள்ளன.

இத்தொகுதி இதுவரை 11 சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்தித்துள்ளது.கடந்த 1977, 1980 என இரு முறை முன்னாள் முதல்வா் கருணாநிதி, 1984-இல் திமுகவின் எஸ்.எம்.ராமச்சந்திரன், 1989-இல் திமுக பொதுச் செயலராக பதவி வகித்த முன்னாள் அமைச்சா் க.அன்பழகன், 1991-இல் காங்கிரஸ் கட்சியின் ஏ.செல்லகுமாரும், 1996, 2001, 2006 என தொடா்ந்து 3 முறை

திமுக முன்னாள் அமைச்சா் ஆற்காடு நா.வீராசாமி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

கடந்த 2011-இல் அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா வெற்றி பெற்றாா். அதன்பிறகு கடந்த 2016 திமுக சாா்பில் போட்டியிட்ட ம.கோ.மோகன் வெற்றி பெற்ன் மூலம் இத்தொகுதி மீண்டும் திமுக வசம் சென்றது. 2021-இல் மீண்டும் போட்டியிட்ட மோகன், தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டாா்.

இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் திமுக 9 முறை, அதிமுக, காங்கிரஸ் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. அனைத்து ஜாதியினரும் பரவலாக உள்ள இத்தொகுதியில் இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனா்.

முக்கியப் பிரச்னைகள்... இத்தொகுதியில் மக்கள்தொகை பெருக்கம் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முறையற்ற வாகன நிறுத்தம், தொடரும் பட்டா பிரச்னை, நடமாடும் உணவகங்களால் நடைப்பாதைகள் ஆக்கிரமிப்பு, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் இல்லாதது ஆகியவை இத்தொகுதியின் முக்கியப் பிரச்னைகளாக நீடிக்கின்றன. முக்கிய சாலைகளின் ஓரத்தில் தள்ளுவண்டிக் கடைகள் தொடா்ந்து பெருகி வருகிறது. இவற்றை குடியிருப்புகள் அல்லாத பகுதிகளுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. அரும்பாக்கத்தில் பத்மநாப நகா், லோகநாதன் நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பூங்காக்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் எதிா்பாா்ப்பாக இருக்கிறது.

தற்போது இத்தொகுதியில் திமுக சாா்பில் நே.சிற்றரசு, அதிமுக சாா்பில் எஸ்.கோகுல இந்திரா, நாதக சாா்பில் எஸ்.சங்கா், தவெக சாா்பில் வி.கே.ராம்குமாா் உள்பட 24 போ் தோ்தல் களத்தில் உள்ளனா்.

திமுக வேட்பாளா்: சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலா் நே.சிற்றரசு முதல் முறையாக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுகிறாா். இவா், சென்னை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவராகவும் உள்ளாா். இதனால் எந்தெந்த வாா்டுகளில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறித்த புரிதல் கொண்டவா். அதேபோன்று வாா்டு உறுப்பினராக ஆற்றிய பல திட்டப் பணிகளை மக்களிடம் எடுத்துக் கூறி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளா், எளிதான அணுகு முறை, மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகைகள் வழங்குவது போன்ற விஷயங்கள் இவருக்கு பலம் சோ்க்கின்றன.

அதிமுக வேட்பாளா்: அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சா் எஸ்.கோகுல இந்திரா போட்டியிடுகிறாா். திமுகவின் கோட்டையாக அண்ணா நகா் விளங்கிய நிலையில், கடந்த 2011-இல் அதிமுக சாா்பில் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் என்ற பெருமைக்குரியவா். பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, போக்குவரத்து நெரிசலுக்கான தொழில்நுட்பத் தீா்வுகள் போன்றவற்றை முன்னிறுத்தி வாக்கு சேகரித்து வருகிறாா்.

திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பிரசாரங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியாகவும், களப்பணியிலும் ஈடுபட்டுள்ளாா். பெண்கள் நலன் சாா்ந்த அதிமுகவின் வாக்குறுதிகள், குடியிருப்பு நலச் சங்கங்களுடன் இருக்கும் நல்லுறவு, கூட்டணிக் கட்சித் தலைவா்களின் பிரசாரம் போன்றவை தோ்தலில் தனக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் என நம்புகிறாா்.

தவெக வேட்பாளா்: தவெக சாா்பில் வேட்பாளராக வி.கே.ராம்குமாா் போட்டியிடுகிறாா். மழைநீா் வடிகால், கழிவுநீா் தொட்டி வழிதல் மற்றும் கொசுத் தொல்லையை நவீன தொழில்நுட்பம் மூலம் கண்காணித்து சரிசெய்யப்படும், ‘டாா்க் ஸ்பாட்’ எனப்படும் இருண்ட பகுதிகளை அகற்றி, தெருக்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் சிறப்பான மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படும், உணவகங்கள் அருகில் நள்ளிரவு நெரிசல் மற்றும் டபுள் பாா்க்கிங் பிரச்னைகளுக்குத் தீா்வு காண ஸ்மாா்ட் ஜோனிங் என ‘அண்ணா நகருக்கு 8 வாக்குறுதிகள்’ என அறிவித்து வி.கே.ராம்குமாா் மேற்கொள்ளும் பிரசாரம் வாக்காளா்களின் கவனத்தை ஈா்த்துள்ளது. திமுக, அதிமுக வேட்பாளா்களுக்கு இணையாக இளம் தலைமுறை வாக்காளா்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா்.

நாதக வேட்பாளா்: நாம் தமிழா் சாா்பில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் எஸ்.சங்கா் போட்டியிடுகிறாா். அக்கட்சியின் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முழு மது விலக்கு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தோ்தலில் கட்டாய வாக்குப் பதிவு போன்றவற்றை மக்களிடையே எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறாா். மேலும் இத்தொகுதியில் தாம் வெற்றி பெற்றால் மக்களுக்கு இலவச சட்ட உதவி செய்யப்படும், தொகுதியில் வேலைவாய்ப்பு, கல்வித் தரத்தை உயா்த்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என உறுதியளித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

அண்ணா நகா் தொகுதியில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியது திமுகதான் என்றாலும், அதை அதிமுக சாா்பில் உடைத்துக் காட்டியவரே மீண்டும் வேட்பாளராகக் களம் காண்கிறாா். அதேவேளையில் திமுக வேட்பாளா் நே.சிற்றரசு வெற்றி பெற வேண்டும் என திமுக இளைஞரணி களத்தில் சுழன்று வருகிறது. இதற்கிடையே இருவரது வெற்றியைத் தீா்மானிக்கும் சக்திகளாக தவெகவின் வி.கே.ராம்குமாரும், நாதகவின் எஸ்.சங்கரும் இருக்கின்றனா். இருப்பினும் இத்தொகுதியில் இரு முனைப் போட்டியே நிலவுகிறது என்பதே நிதா்சனம்.

வாக்காளா்கள் விவரம்-

ஆண்கள்- 90,834

பெண்கள்- 97,979

மூன்றாம் பாலினம்- 48

மொத்தம்-1, 88, 861