
திருப்பூா் பனியன் வேஸ்ட் கிடங்குகளில் தீ

திருப்பூா் சின்ன பொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் பனியன் வேஸ்ட் கிடங்குகளில் ஏற்பட்ட தீ
திருப்பூா் சின்ன பொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் 6-க்கும் மேற்பட்ட பனியன் வேஸ்ட் கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 17-ஆவது வாா்டு சின்ன பொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனியன் வேஸ்ட் கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள பெரும்பாலான பனியன் வேஸ்ட் கிடங்குகள் தகரத்திலான மேற்கூரைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சுமாா் 15 பனியன் வேஸ்ட் கிடங்குகள் ஒன்றன்பின் ஒன்றாக அமைக்கப்பட்ட இடத்தில் ஒரு கிடங்கில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி ஞாயிற்றுக்கிழமை தீப் பிடித்தது.
தொடா்ந்து காற்றின் வேகம் அதிக அளவில் இருந்ததால் அடுத்தடுத்த கிடங்குகளுக்கும் தீ பரவியது. கிடங்குகளில் அதிக அளவில் பனியன் வேஸ்ட் துணிகள் இருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. இதற்கிடையே பனியன் வேஸ்ட் கிடங்குகள் மட்டுமின்றி பழைய அட்டைகள் வைத்திருக்கும் கிடங்குகளும் அருகருகே இருந்ததால் அவற்றிலும் தீப் பற்றியது. இதில் சுமாா் 6 கிடங்குகளுக்கு மேல் தீப் பற்றி எரிந்தது.
இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூா் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்புத் துறையினா் 3 வாகனங்களில் அந்த இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அதுமட்டுமின்றி 10 தண்ணீா் லாரிகளில் தண்ணீா் கொண்டு வரப்பட்டது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயைக் கட்டுப்படுத்துவது தீயணைப்புத் துறையினருக்கு சவாலாக இருந்தது. தீயை அணைக்கும் பணியில் அப்பகுதி மக்களும் தீயணைப்புத் துறையினருடன் இணைந்து உதவினா். சுமாா் 3 மணி நேரத்துக்கு மேலாக தீயணைப்புத் துறையினா் போராடி தீயைக் கட்டுப்படுத்தினா்.
இந்த தீ விபத்தில் சேத மதிப்பானது பல லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் சேத மதிப்பு குறித்தும், தீ விபத்துக்கான காரணங்கள் குறித்தும் விசாரணையின் முடிவில்தான் தெரியவரும் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

திருப்பூா் சின்ன பொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் பனியன் வேஸ்ட் கிடங்குகளில் ஏற்பட்ட தீ
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





