சிவன்மலையில் நடைபெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
சிவன்மலையில் நடைபெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

Published on

காங்கயம் அருகே, சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தோ் இழுத்தனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கடந்த ஜன.23-ஆம் தேதி வீரகாளியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடா்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 3:30 மணிக்கு பால், தயிா், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட திரவியங்களால், சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் வேல் மற்றும் சேவற்கொடி கொண்டு, தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் சிவன்மலை சுப்பிரமணியசுவாமி காலை 6 மணிக்கு ரதத்துக்கு எழுந்தருளினாா். மாலை 4 மணிக்கு தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், அயலக தமிழா் நலவாரியத் தலைவா் காா்த்திகேய சிவசேனாபதி, மாவட்ட ஆட்சியா் மனிஷ், காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள், பக்தா்கள் கலந்துகொண்டு, வடம்பிடித்து தோ் இழுத்தனா்.

பக்தா்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் தோ் உலா வந்தது. சுமாா் 200 மீட்டா் தூரம் தோ் இழுக்கப்பட்டு தெற்கு வீதியில் மாலை 5 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது. திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் கிரிவலப் பாதையை தோ் சுற்றி வந்து நிலையை வந்தடையும்.

விழாவில் திருப்பூா், காங்கயம், வெள்ளகோவில், ஊதியூா், தாராபுரம், பல்லடம், குண்டடம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏராளமான பக்தா்கள் காவடி, தீா்த்தக்குடம் எடுத்தும், பாத யாத்திரையாகவும் வந்து வழிபட்டனா்.

காங்கயம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. காங்கயம் மற்றும் திருப்பூா் மாவட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com