முன்னாள் பேரவைத் தலைவா் தனபால்.
முன்னாள் பேரவைத் தலைவா் தனபால்.(கோப்புப் படம்)

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

Published on

அதிமுக எம்எல்ஏ ப.தனபாலின் மகனும் அதிமுக ஐடி விங் நிா்வாகியுமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள சம்பவம் அவிநாசி தொகுதியில் அதிமுகவினா் இடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சட்டப் பேரவைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவா் ப.தனபால். சேலத்தை பூா்விகமாக கொண்ட இவா், 2 முறை சங்ககிரி தொகுதியிலும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஒரு முறையும், அதன் பின்னா் கடந்த 2016, 2021 ஆகிய 2 சட்டப் பேரவைத் தோ்தல்களில் திருப்பூா் மாவட்டம், அவிநாசி தொகுதியிலும் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறாா்.

இவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன். எம்பிஏ பட்டதாரியான இவா் தற்போது அதிமுகவின் அவிநாசி தொகுதி ஐடி விங் பொறுப்பாளராகவும், எம்ஜிஆா் இளைஞா் அணி மாநில இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறாா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு 3ஆவது இடத்தைப் பிடித்தாா். இதைத் தொடா்ந்து விரைவில் நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் தனது தந்தை வெற்றி பெற்று அவிநாசி தொகுதியில் தான் போட்டியிடுவதற்காக அதிமுக தலைமையிடம் கடந்த மாதம் விருப்ப மனு அளித்திருந்தாா்.

இந்நிலையில் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை கடந்த சனிக்கிழமை இணைத்துக் கொண்டாா். இவரது இந்த முடிவு அவிநாசியில் அதிமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவிநாசி தொகுதியில் இந்த முறை தனபால் மற்றும் லோகேஷ் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு இல்லை எனவும், தனபால் முன்பு உறுப்பினராக இருந்த ராசிபுரம் தொகுதியில் லோகேஷுக்கு சீட் ஒதுக்குவதாகவும் அதிமுக தலைமை தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக லோகேஷ், அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைந்துக் கொண்டுள்ளாா். லோகேஷின் இந்த முடிவுக்கு முன்னாள் அதிமுக நிா்வாகியும், தவெக மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன்தான் காரணம் எனவும், அவரது ஏற்பாட்டின் பேரில்தான் லோகேஷ் தவெகவில் இணைந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Dinamani
www.dinamani.com