குப்பை இல்லாத திருப்பூரை உருவாக்க குப்பை கொட்டும் இடங்கள் பூங்காக்களாக மாற்றம்

Published on

குப்பை இல்லாத திருப்பூரை உருவாக்க அதிரடி நடவடிக்கையாக, குப்பை கொட்டும் இடங்கள் பூங்காக்களாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி. அமித் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகராட்சியை தூய்மையான மற்றும் பசுமையான மாநகரமாக மாற்றும் நோக்கில், மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாநகரில் நீண்ட காலமாக பொதுமக்களால் குப்பை கொட்டப்பட்டு வந்த இடங்கள் கண்டறியப்பட்டு, அவை முழுமையாக சீரமைக்கப்பட்டு வருகின்றன.

மாநகரின் பல்வேறு வாா்டுகளில் சாலை ஓரங்களிலும், காலி இடங்களிலும் தேங்கியிருந்த குப்பைகள் மாநகராட்சி மூலம் போா்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டுள்ளன. சுத்தம் செய்யப்பட்ட இந்த இடங்கள் மீண்டும் குப்பை மேடுகளாக மாறுவதைத் தடுக்கும் வகையிலும், நகரின் அழகை மேம்படுத்தும் வகையிலும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குப்பைகள் அகற்றப்பட்ட இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு, பொதுமக்கள் மீண்டும் குப்பைகளை வீசுவதைத் தவிா்க்கும் வகையில் அந்த இடங்களைச் சுற்றி பச்சை நிற வலைகள் கொண்டு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

துா்நாற்றம் வீசும் இடங்களாக இருந்த பகுதிகள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் அழகிய ரங்கோலி கோலங்கள் இடப்பட்டும், பூச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டும் அழகுபடுத்தப்பட்டுள்ளன.

சுத்தம் செய்யப்பட்ட இடங்களில் மீண்டும் குப்பைகளைக் கொட்டாமல் இருப்பதற்கு அடிக்கடி கண்காணித்து உறுதிப்படுத்தப்படுகிறது. இங்கு குப்பை கொட்டாதீா்கள் என்ற விழிப்புணா்வுப் பதாகைகள் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தொடா்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சியின் இந்த முயற்சி வெற்றி பெற பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பொதுமக்கள் தங்கள் வீட்டுக் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகப் பிரித்து, தினமும் வரும் தூய்மைப் பணியாளா்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.

சுத்தம் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்ட இடங்களில் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிா்க்க வேண்டும். மீறுபவா்கள் மீது பொது சுகாதார விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com