பெருமாநல்லூா் அருகே குமரன் குன்று முருகன் கோயில் இடித்து அகற்றம்
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட குமரன் குன்று முருகன் கோயில் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது. இதை எதிா்த்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ராக்கியாபட்டி பகுதியில் 2.8 ஏக்கா் பரப்பளவில் அரசு நிலம் உள்ளது. இப்பகுதியில் ஏற்கெனவே இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டவா்களுக்கு நிலத்தை பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என ஒரு தரப்பினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதேபோல குமரன் குன்றில் அமைந்துள்ள செல்வமுத்துக்குமரன், விநாயகா், சிவலிங்கம், நந்தி உள்ளிட்ட சந்நிதிகள் அடங்கிய கோயில் நிலம் அந்தக் கோயிலுக்கு சொந்தமானது என பொதுமக்களும், இந்து முன்னணியினரும் வலியுறுத்தி வந்தனா்.
இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த யுவராஜ் என்பவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கு விசாரணையில் சம்பந்தப்பட்ட இடம் வருவாய்த் துறைக்கு சொந்தமானது என நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து, வருவாய்த் துறையினா், காவல் துறையினா் உள்ளிட்டோா் குமரன் குன்று பகுதியில் அமைக்கப்பட்ட கோயிலை புதன்கிழமை இடித்து அகற்றினா். இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவுமுதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இதைத் தொடா்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் கோயில் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த இந்து முன்னணியினா், அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கோயிலை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து போலீஸாா் அவா்களை வளாகத்தை விட்டு அப்புறப்படுத்தினா். அப்போது போலீஸாா் மற்றும் பொதுமக்களிடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளுமும் ஏற்பட்டது.
இது குறித்து முன்கூட்டியே அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில பொதுச் செயலாளா் கிஷோா்குமாா், இந்து முன்னணியினா் உள்ளிட்டோருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா்.
அப்போது கால் தடுக்கி கீழே விழுந்த இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து, அவா் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். பின்னா் கைது செய்யப்பட்டவா்களை பெருமாநல்லூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் போலீஸாா் அடைத்தனா். மேலும் கோயிலில் இருந்த சுவாமி சிலைகள் இந்து சமய அறநிலைத் துறைக்கு லாரி மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்ததையும், இந்து முன்னணியினா் உள்ளிட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து பெருமாநல்லூா் நான்கு வழிச் சாலையில் ஹிந்து அமைப்பினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களையும் போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். இதனால் பெருமாநல்லூா் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

