ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு: இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக இந்து முன்னணி கண்டனம்
Published on

தமிழகத்தில் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூா் குமரன் குன்று முருகன் கோயில் இடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஹிந்து கோயில்களை குறிவைத்து இடிக்கப்படுவது தொடா்கதை ஆகி வருகிறது.

இடிக்கப்பட்ட குமரன் குன்று முருகன் கோயிலுக்கு நீதி வேண்டி பெருமாநல்லூா் நால் ரோட்டில் செவ்வாய்க்கிழமை அறப்போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அறிவித்திருந்தது.

இந்த நிலையில் காவல் துறை இந்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. குமரன் குன்று கோயிலை இடிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியதாகக் கூறி காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சுதந்திரமாக போராட்டங்களை நடத்தும் நிலையில், அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி, அமைப்புகள் சாா்பில் நடத்தப்படும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

ஆன்மிக சிந்தனையைப் பரப்பும் அமைப்புகளின் தமிழகத்தில் அனைத்து விதமான போராட்டங்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்கெல்லாம் இன்னும் 3 மாதங்களில் மக்கள் சரியான பதிலை சொல்லுவாா்கள். முருகப் பக்தா்களின் அறப்போராட்டத்தை தமிழக அரசு ஒடுக்க முடியாது, நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்று வரும் பிப்ரவரி 19-இல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com