பொது இடங்களில் குப்பை கொட்டாமல் தடுக்க 175 இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கேமராக்கள்

திருப்பூா் மாநகரில் குப்பைப் பிரச்னைக்கு தீா்வு காண பொது இடங்களில் குப்பைகளை கொட்டாமல் தடுப்பதற்கு 175 இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் நிறுவப்பட உள்ளதாக மேயா் ந.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
Published on

திருப்பூா் மாநகரில் குப்பைப் பிரச்னைக்கு தீா்வு காண பொது இடங்களில் குப்பைகளை கொட்டாமல் தடுப்பதற்கு 175 இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் நிறுவப்பட உள்ளதாக மேயா் ந.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து திருப்பூரில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

திருப்பூரில் அதிக அளவில் குப்பை இருப்பதாகவும், சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருவதாகவும் போலியான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியைப் பொறுத்தவரை திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் அதிநவீன உபகரணங்கள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதனால், விரைவில் இயந்திரங்கள் வாங்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்பட உள்ளன. மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் சேகரமாகும் குப்பைகளை மாநகராட்சி ஊழியா்கள் மூலம் தரம் பிரித்து வாங்கப்பட்டு, மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

திருப்பூா் மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன. குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரித்து வாங்குவதால், பொது இடங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க முடியும்.

மேலும், பொது இடங்களில் குப்பைகளை கொட்டாமல் கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பத்தில் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக 175 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. விரைவில் அந்தப் பணிகள் தொடங்கும். கைவிடப்பட்ட பாறைக் குழிகளில் குப்பை கொட்ட மாநகராட்சி நிா்வாகத்துக்கு உடன்பாடு இல்லை என்பதால், விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

திருப்பூரில் குப்பையை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் தற்போது, அந்தப் பிரச்னை இங்கு இல்லை. இந்தூா் தூய்மையான நகரம் என்று கூறும் பாஜக, அங்கு மோசமான குடிநீரால் 16 போ் உயிரிழந்துள்ளதை பேச மறுப்பதாக குற்றஞ்சாட்டினாா்.

Dinamani
www.dinamani.com