மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் மனீஷ் முன்னிலையில் வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நீா்வளத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்களுடன் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் வருவாய்த் துறை சாா்பில் வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பித்தோரின் விவரங்கள் குறித்தும், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய நிலுவையில் உள்ள விவரங்கள் குறித்தும், மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்த பயனாளிகள் தொடா்பாகவும், கூட்டுறவுத் துறையின் சாா்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்தும், ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்தும், நீா்வளத் துறையின் சாா்பில் காங்கயம் ஊராட்சி ஒன்றியம், கீரனூா், சிவன்மலை, படியூா், பரஞ்சோ்வழி, ஆலாம்பாடி ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த 47 குளம், குட்டைகளுக்கு நீரேற்று முறையில் நீா்நிரப்பும் திட்டம் தொடா்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இத்துறைகளில் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்தும், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அத்துடன், மாவட்டத்தில் தற்போது பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களுக்கு வழங்கிடவும், அரசின் தொலைநோக்கு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய நிலை குறித்தும் துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறியப்பட்டது.
அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பில் பல்லடம் வட்டம், பூமலூா் கிராமத்தைச் சோ்ந்த 7 பயனாளிகளுக்கு ரூ.3.63 லட்சம் மதிப்பீட்டிலான வீட்டுமனை பட்டாக்கள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 69 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.70.24 லட்சம் மதிப்பீட்டிலான மின் மோட்டா் பொருத்திய 3 சக்கர வாகனங்களை அமைச்சா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மேயா் ந.தினேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
