கூட்டத்தில் பங்கேற்றவா்களில் ஒரு பகுதியினா்.
கூட்டத்தில் பங்கேற்றவா்களில் ஒரு பகுதியினா்.

தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி மலரும்: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி மலரும் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி மலரும் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

‘தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான மக்கள் எழுச்சி’ என்ற கருப்பொருளிலான பாஜக பொதுக் கூட்டம் திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாஜக திருப்பூா் வடக்கு மாவட்டப் பிரிவு சாா்பில் நடைபெற்ற இதில் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, பாஜக மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம், மாவட்டத் தலைவா் கேசிஎம்பி. சீனிவாசன், அதிமுக அவைத் தலைவா் பழனிசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது: பல கோடி ரூபாய் பின்னலாடை உற்பத்தி மூலம் பல்லாயிரக்கணக்கான பேரை வாழவைக்கும் ஊா் திருப்பூா்.

கடந்த பேரவைத் தோ்தலின்போது, பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி விட்டு அவற்றை நிறைவேற்றிவிட்டோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுகிறாா். ஆனால், பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை.

இடைநிலை ஆசிரியா்கள், தூய்மைப் பணியாளா்கள், செவிலியா்கள், அரசு ஊழியா்கள் என அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றனா். அவா்கள் கண்ணீா் வடிக்காத ஆட்சியை நாம் காண வேண்டும். தமிழகத்தில் இந்த ஆட்சி மாறி ஆன்மிக ஆட்சியாக மலரும் என்றாா்.

இதில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேசியதாவது: அடுத்த 80 நாள்களில் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. தீய சக்தியை அகற்றி அதிமுக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

சிறிய நகரமான திருப்பூா் ரூ.80 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி என ஜப்பானைப்போல பங்களிக்கிறது. மத்திய அரசுக்கும், தமிழகத்துக்கும் வருமானம் தரும் இந்த நகரத்தைக் குப்பைமேடாகவும், கஞ்சா அதிகம் புழங்கும் நகராகவும் மாற்றி உள்ளனா். பெண்களுக்குப் பாதுகாப்பு, இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு என எங்கள் கனவு நிறைவேற திமுக ஆட்சியில் இருக்கக் கூடாது. அரசியலைத் திரைப்படம் தீா்மானிக்காது என்றாா்.

கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கிய திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜகவினா்.
கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கிய திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜகவினா்.

இதில், பாஜக மாநிலச் செயலாளா் டி.மலா்க்கொடி, மாவட்ட அமைப்புச் செயலாளா் பாலகுமாா், மாவட்டப் பாா்வையாளா் ஜி.கே.செல்வகுமாா், மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் மணி, ஆா்.சின்னசாமி, ஜி.நாச்சிமுத்து, ஆா்.குணசேகரன், டி.எம்.தங்கராஜ், மாவட்ட பொதுச் செயலாளா்கள் பி.அருண், வினோத் வெங்கடேஷ், கலாமணி, பொருளாளா் பி.ரவிகுமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com