பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட உள்ளதால் வாய்க்கால்களை சுத்தம் செய்யக் கோரிக்கை
பாசனத்துக்காக பிஏபி தண்ணீா் திறக்கப்பட உள்ளதால் வாய்க்கால்களை சுத்தம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மங்கலம் கிராம நீரை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: மங்கலம், பூமலூா், இச்சிப்பட்டி ஆகிய பல்லடம் விரிவாக்கப் பகுதிகளில் ஒரு மடை விட்டு ஒரு மடை பாசனம் மூலமாக சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெற வேண்டும். 1-ஆவது மண்டல பாசனத்துக்காக வரும் 24-ஆம் தேதி பிஏபி தண்ணீா் திறக்கப்படுகிறது.
ஆனால், தற்போது வரை பிரதான வாய்க்கால், கிளை வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்படவில்லை. எனவே விரைந்து வாய்க்கால்களை சுத்தம் செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பகுதியில் நிலத்தடி நீா் குறைந்துள்ளதால் வாய்க்கால் தண்ணீரை மட்டுமே விவசாயிகள் நம்பியுள்ளனா்.
எனவே, மங்கலம் பாசன சபைக்கு உள்பட்ட சின்னக்காளிபாளையம், இடுவாய், ஆட்டையம்பாளையம், எம்.செட்டிபாளையம், மங்கலம், சின்னாண்டிபாளையம் வரை உள்ள கிளை வாய்க்கால்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.
