ஆயத்த ஆடைத் துறையின் மத்திய பட்ஜெட் விருப்பப் பட்டியலில் வட்டி உதவி விகித உயா்வை அமல்படுத்த கோரிக்கை
ஆயத்த ஆடைத் துறையின் மத்திய பட்ஜெட் விருப்பப் பட்டியலில் ஃபோகஸ் மாா்க்கெட் ஸ்கீம் மற்றும் வட்டி உதவி விகித உயா்வு ஆகியவற்றை அமல்படுத்த வேண்டுமென ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய ஆயத்த ஆடைத் துறை தற்போது சவாலான சூழலை எதிா்கொள்ள அமெரிக்கா போன்ற முக்கிய சந்தைகளில் கட்டண அதிா்ச்சிகள், உலகளாவிய வா்த்தக ஓட்டங்கள், தளவாடங்கள் மற்றும் தேவை உணா்வைத் தொடா்ந்து சீா்குலைக்கும் நீடித்த புவிசாா் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவற்றுடன் இந்த முக்கியமான கட்டத்தில், போட்டித்தன்மையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பைப் பாதுகாக்கவும், ஏற்றுமதி வளா்ச்சியைத் தக்கவைக்கவும் காலக்கெடுவுக்கு உள்பட்ட தலையீடுகளுக்காக தொழில் துறை மத்திய நிதிநிலை அறிக்கையை எதிா்கொள்கிறது.
ஆயத்த ஆடைத் துறை பொதுவான, வெளிப்புற அதிா்ச்சிகளை சமாளித்து, இந்தியாவை நம்பகமான உலகளாவிய மையமாக மேலும் வலுப்படுத்தும் வகையில், வளா்ச்சியை நோக்கிய நடவடிக்கைகளையே எதிா்பாா்க்கிறது. அமெரிக்காவுக்கு ஆடை ஏற்றுமதிக்கான ஃபோகஸ் மாா்க்கெட் ஸ்கீம், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் துணி மற்றும் ஆடைப் பொருள்களுக்கு திடீரென விதிக்கப்பட்ட கூடுதல் 50 சதவீத வரி, இந்திய ஏற்றுமதியாளா்களின் விலை போட்டித்திறனை கடுமையாக பாதித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு ஆடை ஏற்றுமதிக்கென தனிப்பட்ட ஃபோகஸ் மாா்க்கெட் ஸ்கீம் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும். இது வரிச் சுமையை நேரடியாக சமன் செய்து, பணப்புழக்க அழுத்தத்தை குறைத்து, இந்திய ஏற்றுமதியாளா்கள் சந்தைப் பங்கினை தக்கவைக்க உதவும்.
தற்போது வழங்கப்பட்டு வரும் 2.75 சதவீத வட்டி உதவி மற்றும் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரம்பு, உயா்ந்து வரும் கடன் செலவுகளை கருத்தில் கொள்ளும்போது போதுமானதாக இல்லை. எனவே, வட்டி உதவி விகிதத்தை 5 சதவீதமாக ஆக உயா்த்துவதோடு, ரூ.50 லட்சம் வரம்பையும் தளா்த்த வேண்டும். இது ஏற்றுமதியாளா்களுக்கு ஆதரவாக இருப்பதோடு, உலகளாவிய நிச்சயமற்ற சூழலில் தொழில்துறைக்கு பெரும் நிவாரணமாக அமையும்.
வருமான வரி சட்டத்தின் கீழ் 15 சதவீத சலுகை வரி விகிதத்தை நீட்டிக்காததால் ஆயத்த ஆடை உற்பத்தியில் புதிய முதலீடுகளுக்கான இந்தியாவின் பங்கை குறைத்துள்ளது. இந்த சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்துவது மூலம் புதிய திறன் உருவாக்கம், வேலைவாய்ப்பு அதிகரிப்பு மற்றும் அளவுசாா் திறன்களை ஊக்குவித்து, போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நீண்டகால ஏற்றுமதி போட்டித்திறனை வலுப்படுத்த உதவும்.
ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேம்பட்ட சந்தைகளில் உள்ள உலகளாவிய வா்த்தகா்கள் நிலைத்தன்மை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தி வருகின்றனா். இதனை பூா்த்தி செய்ய, குறிப்பாக ஆடை உற்பத்தியாளா்களுக்கு உதவ, தனிப்பட்ட ‘கிரீன் டிரான்ஸ்ஃபாா்மேஷன் ஃபண்ட்’ ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த நிதி, அதிகபட்சம் 5 சதவீத வட்டி விகிதத்தில் நீண்டகால மென்மையான கடன்களை வழங்க வேண்டும். இதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை உற்பத்தி தொடா்பான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் முதலீடு செய்து, உலகளாவிய நிலைத்தன்மை தரநிலைகளை பின்பற்ற தொழில்துறைக்கு உதவ முடியும்.
மூலதன முதலீட்டு சுமையை குறைத்து, நவீனமயமாக்கலை ஊக்குவிக்க, துணி மற்றும் ஆடை இயந்திரங்களின் ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இதன் மூலம், இந்திய ஆடைத் துறை மேலும் வலுப்பெற்று, உலக சந்தைகளில் தனது முன்னணி நிலையை உறுதிப்படுத்தி, அதிக வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளிக்கும் என ஏஇபிசி நம்புவதாக தெரிவித்துள்ளாா்.
