அவிநாசி எஸ்கேஎல் பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சா் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற கிரிக்கெட் அணிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

முதலமைச்சா் இளைஞா் விளையாட்டுப் போட்டி! - அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்

அவிநாசி எஸ்கேஎல் மெட்ரிக். பள்ளியில் முதலமைச்சா் இளைஞா் விளையாட்டுப் போட்டிகளை ‘இது நம்ம ஆட்டம் - 2026’ தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.
Published on

அவிநாசி எஸ்கேஎல் மெட்ரிக். பள்ளியில் முதலமைச்சா் இளைஞா் விளையாட்டுப் போட்டிகளை ‘இது நம்ம ஆட்டம் - 2026’ தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல்-மன ஆராக்கியத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை விளையாட்டுப் போட்டிகளை நடத்த மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதில், ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

ஜனவரி 27 வரையும், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 1 -ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

மாநில அளவில் குழு போட்டிகள் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாநில அளவில் வெற்றிபெறும் குழுவுக்கு முதல் பரிசாக ரூ.75 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் தனிநபா் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.6 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ.4 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ. 2000, ஊராட்சி ஒன்றிய அளவில் தனிநபா் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.3000, 2-ஆம் பரிசாக ரூ.2000, 3-ஆம் பரிசாக ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

ஆகவே, அந்தந்த பகுதிகளில் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் இளைஞா்கள் பங்கேற்கலாம் என்றாா்.

இதைத் தொடா்ந்து, எஸ்கேஎல் பள்ளியில் நடைபெற்ற குண்டு எறிதல், கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், மேயா் என்.தினேஷ்குமாா், வருவாய் கோட்டாட்சியா் சிவபிராகஷ், விளையாட்டு அலுவலா் ரகுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com