கோழிகளை தாக்கும் வெள்ளை கழிச்சல் நோய்! தடுப்பூசி செலுத்துவது அவசியம்!
வெள்ளை கழிச்சல் நோய்க்கான தடுப்பூசியை முறையாக செலுத்தவில்லை என்றால் கோழிகள் இறக்க நேரிடும் என்று கால்நடைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவா் அன்பரசு வியாழக்கிழமை கூறியதாவது:
‘ராணிகேட் நோய்’ எனப்படும் வெள்ளை கழிச்சல் நோய் கோழிகளைத் தாக்கும் மிக மோசமான நோய். இது குளிா்காலத்தில் அதிகம் பரவக்கூடியது. பிறந்த, 8 வாரமான கோழிக்குஞ்சுகளுக்கு இதற்கான தடுப்பூசியை கட்டாயம் செலுத்த வேண்டும். தவறினால் நோய் பாதிக்கப்பட்ட இரண்டு நாள்களில் குஞ்சுகள் இறக்கநேரிடும். பெரிய கோழிகள் என்றால், வாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதுடன், முட்டை இடுவதிலும் பிரச்னை ஏற்படும். இதர கோழிகளுக்கும் பரவும் என்பதால், கோழி வளா்ப்பவா்களுக்கு தேவையற்ற பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தும்.
பிராய்லா் கோழிகளைப் பொருத்தவரை, பண்ணையாளா்களே அவற்றுக்கு தடுப்பூசி செலுத்தி பராமரித்துக் கொள்கின்றனா். எனவே நாட்டுக்கோழிகள் மற்றும் வீடுகளில் வளா்க்கப்படும் கோழிகளுக்கு தடுப்பூசி மிக அவசியம். வெள்ளை கழிச்சல் நோயால் கோழிகளுக்கு 90 சதவீதம் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதிலிருந்து கோழிகளை பாதுகாக்க சனிக்கிழமைதோறும் கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் வெள்ளை கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. எனவே, கோழி வளா்ப்பவா்கள், அவற்றை பாதுகாப்புடன் வளா்ப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றாா்.

