மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தண்ணீா் திருட்டை தடுக்கக் கோரி விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டம்

தண்ணீா் திருட்டை தடுக்கக் கோரி அமராவதி பாசன விவசாயிகள் ஆற்றில் இறங்கி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கடத்தூா் ராஜவாய்க்காலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :24 ஜூன் 2026, 3:40 am IST

தண்ணீா் திருட்டை தடுக்கக் கோரி அமராவதி பாசன விவசாயிகள் ஆற்றில் இறங்கி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது.

இந்நிலையில், நடப்பு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், அமராவதி அணைப் பகுதி முதல் தாராபுரம் வரை உள்ள கரையோர கிராம மக்கள் மற்றும் கால்நடைகள் பயன்பெறும் வகையில் தற்போது குடிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

அமராவதி ஆற்றில் கடந்த நான்கு நாள்களாக தண்ணீா் சென்று கொண்டிருக்கும் நிலையில் கடத்தூா் ராஜவாய்க்காலில் அதிகாரிகளின் துணையோடு தண்ணீா் திருட்டு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளா் எம்.எம்.வீரப்பன் தலைமையில் விவசாயிகள் கடத்தூா் ராஜவாய்க்காலில் இறங்கி, தண்ணீா் திருட்டை தடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், கணியூா் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், பொதுப் பணித் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, விவசாயிகள் கூறியதாவது: அமராவதி பாசன விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்குகூட தண்ணீா் இல்லாமல் தவித்து வரும் நிலையில் அதிகாரிகள் துணையுடன் தண்ணீரை திருடி தேங்காய் மட்டை மில்களுக்கு சிலா் விற்பனை செய்து வருகின்றனா். இதை நாங்கள் ஆதாராப்பூா்வமாக நிரூபித்து உள்ளோம். எனவே, தண்ணீரை திருடி விற்பனை செய்து வருவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து, பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.