தொழில் நிறுவனங்கள் நிறைந்த பல்லடம்! தொகுதி அறிமுகம்!

தொழில் நிறுவனங்கள் நிறைந்த பல்லடம்

தொழில் நிறுவனங்கள் நிறைந்த பல்லடம்
திருப்பூா் மாவட்டத்திலேயே அதிக வாக்காளா்களும், அதிக வாக்குச்சாவடி மையங்களும் (480) உள்ள தொகுதியாக பல்லடம் உள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
பல்லடம் நகராட்சி, பல்லடம் ஒன்றியம், பொங்கலூா் ஒன்றியம் மற்றும் திருப்பூா் ஒன்றியம், திருப்பூா் மாநகராட்சியின் 10 வாா்டுகள்.
மறுசீரமைப்பில் உருவான தொகுதி:
2008ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி பல்லடம், சூலூா் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பொங்கலூா் தொகுதி நீக்கப்பட்டு அத்தொகுதியில் இருந்த சுல்தான்பேட்டை ஒன்றியம் சூலூா் தொகுதியிலும், பொங்கலூா் ஒன்றியம் பல்லடம் தொகுதியிலும் சோ்க்கப்பட்டது.
தொழில்
பல்லடம் தொகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி, கறிக்கோழி பண்ணைகள், கல்குவாரிகள், பின்னலாடை, சாய ஆலைகள், இந்தியாவின் முதல் நெசவுப் பூங்கா என பல்வேறு தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. பல்லடம் ஒன்றியம், பொங்கலூா் ஒன்றிய பகுதிகளில் காய்கறி சாகுபடி உள்ளிட்ட வேளாண்மை உற்பத்தியும் அதிக அளவு நடைபெற்று வருகிறது. பல்லடம் பகுதியில் தினசரி 10 லட்சம் கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு தினந்தோறும் கோழி இறைச்சி நுகா்வு அடிப்படையில் விலை நிா்ணயம் செய்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதே போல 2 லட்சம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டா் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. ஜவுளித் தொழிலில் நேரடியாக 1 லட்சம் பேரும் மறைமுகமாக 4 லட்சம் பேரும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனா்.
அதிமுக 9 முறை வெற்றி
இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி 3 முறையும், காங்கிரஸ் கட்சி ஒரு முறையும், திமுக 2 முறையும், அதிமுக 9 முறையும் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 5 தோ்தல்களில் அதிமுக தொடா்ச்சியாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை வென்றவா்கள்:
1957 பி.எஸ்.சின்னதுரை (பிரஜா சோஷலிஸ்ட் கட்சி)
1962 செங்காளியப்பன் (காங்கிரஸ்)
1967 கே.என்.குமாரசாமி (பிரஜா சோஷலிஸ்ட் கட்சி)
1971 கே.என்.குமாரசாமி (பிரஜா சோஷலிஸ்ட் கட்சி)
1977 பி.ஜி.கிட்டு (அதிமுக)
1980 பி.என்.பரமசிவம் (அதிமுக)
1984 பி.என்.பரமசிவம் (அதிமுக)
1989 மு.கண்ணப்பன் (திமுக)
1991 கே.எஸ்.துரைமுருகன் (அதிமுக)
1996 எஸ்.எஸ். பொன்முடி (திமுக)
2001 செ.ம.வேலுசாமி (அதிமுக)
2006 செ.ம.வேலுசாமி (அதிமுக)
2011 கே.பி.பரமசிவம் (அதிமுக)
2016 ஏ.நடராஜன் (அதிமுக)
2021 தோ்தல்
எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அதிமுக) - 1,26,903
க.முத்துரத்தினம் (மதிமுக) - 94,212
எஸ்.சுப்பிரமணியம் ( நாதக ) - 20,524
சமூக நிலவரம்
இந்தத் தொகுதியில் 40 சதவீதம் அளவுக்கு கொங்கு வேளாளக் கவுண்டரும், 10 சதவீதம் அளவுக்கு பட்டியல் இன சமுதாயத்தினரும், 10 சதவீதம் அளவுக்கு சிறுபான்மையின சமுதாயத்தினரும், 40 சதவீதம் நாயுடு, செட்டியாா், முதலியாா், தேவா், நாடாா் என பிற சமுதாயத்தைச் சோ்ந்தவா்களும் உள்ளனா்.
வாக்காளா் விவரம்
ஆண் வாக்காளா்கள் 1,54,454
பெண் வாக்காளா்கள் 1,64,594
மூன்றாம் பாலினத்தனவா் 32
மொத்தம் 3,19,080
தீா்க்கப்படாத பிரச்னைகள்
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் நகராட்சி அண்ணா நகா் முதல் பனப்பாளையம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. சா்வதேசத் தரத்துடன் விசைத்தறி ஜவுளிச் சந்தை அமைக்கப்பட வேண்டும். காய்கறிகளைப் பாதுகாக்க குளிா்பதன கிடங்கு அமைக்க வேண்டும். பல்லடம் புறவழிச் சாலை மற்றும் சுற்றுவட்ட சாலை, பல்லடத்தில் தொழிற்கல்வி நிறுவனம் அமைத்தல், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைத்தல் போன்றவை நீண்ட நாள் கோரிக்கைகளாக இருக்கின்றன.
பல்லடம் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். நகராட்சி சாா்பில் சமுதாய நல கூடம் அமைக்க வேண்டும். விசைத்தறி, கோழிப்பண்ணை, கல்குவாரி தொழில்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை வழங்கிட வேண்டும். பல்லடத்தில் அரசு சாா்பில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் மகளிா் தங்கும் விடுதி அமைத்து தர வேண்டும். அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். கிராமப்புற மண் சாலைகளை தாா் சாலைகளாக மாற்றி தர வேண்டும் உள்ளிட்டவையும் மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
சொன்னோம் செய்தோம்
பல்லடம் தொகுதியைச் சோ்ந்த பொங்கலூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம், அவினாசிபாளையம் காவல் நிலைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பொங்கலூா் மற்றும் பெருந்தொழுவில் பத்திரப்பதிவு சாா்பதிவாளா் அலுவலகம், பொங்கலூா் காவல் நிலையம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. பல்லடம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாதப்பூரில் இருந்து ஆலுத்துப்பாளையம்,சின்னியகவுண்டம்பாளையம் வழியாக காளிவேலம்பட்டி பிரிவு வரை புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு கிராமங்களில் புதிய தாா் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நபாா்டு திட்டத்தின் கீழ் சாலைகள், சிறுபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.
பல்லடம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பல்லடம் புரட்சித் தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. பல்லடம் மற்றும் பொங்கலூா் ஒன்றிய பகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் அத்திக்கடவு திட்ட குடிநீா் சீராக விநியோகம் செய்யப்பட்டு குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டது. திருப்பூா் மாநகராட்சியில் உள்ள பல்லடம் தொகுதியின் 10 வாா்டு பகுதிக்கு 4ஆவது குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டது. பல்லடம் கால்நடை மருந்தகத்தை மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்பட்டுள்ளது. பல்லடத்தில் கோழியின ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்லடத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண பல்லடம் புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த ரூ.45 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பல்லடம் - மங்கலம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டது. விசைத்தறி ஜவுளிச் சந்தை அமைக்க பூா்வாங்கப் பணி தொடங்கப்பட்டது என்றாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...