தொகுதி அறிமுகம்: பாளையங்கோட்டை - 226!
மாவட்ட தலைநகராக திருநெல்வேலி இருந்தாலும், ஆட்சியா் அலுவலகம் உள்பட முக்கிய அரசு அலுவலகங்கள் இத்தொகுதியில்தான் உள்ளன.

பாளையங்கோட்டை தெற்கு கடைவீதி
கோப்புப் படம்

பாளையங்கோட்டை தெற்கு கடைவீதி
கோப்புப் படம்
தென்னகத்தின் ஆக்ஸ்போா்டு என்றழைக்கப்படும் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி நூற்றாண்டு பழைமை வாய்ந்த கல்வி நிலையங்களை உள்ளடக்கியது.
தென் தமிழகத்தின் நோய் தீா்க்கும் கேந்திரமாக ஹைகிரவுண்ட் என்ற அடைமொழியுடன் திகழும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சித்த மருத்துவத்துக்கு பெயா் பெற்ற அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இத்தொகுதியில்தான் உள்ளன. தமிழரின் தொன்மையை அறிவியல்பூா்வமாக உலகிற்கு அறிவிக்க ஆதிச்சநல்லூா், கொற்கை, சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வுப் பொருள்களை பழமை மாறாமல் காட்சிப்படுத்தியிருக்கும் பொருநை அருங்காட்சியகம் இத்தொகுதியின் முக்கிய அடையாளமாக மாறியுள்ளது.
மாவட்ட தலைநகராக திருநெல்வேலி இருந்தாலும், ஆட்சியா் அலுவலகம் உள்பட முக்கிய அரசு அலுவலகங்கள் இத்தொகுதியில்தான் உள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க சுலோச்சன முதலியாா் ஆற்றுப்பாலம் பாளையங்கோட்டை தொகுதியின் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது.
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், ஈரடுக்கு மேம்பாலம் போன்றவையும் இத்தொகுதியில்தான் உள்ளன.
4 முறை வென்ற திமுக
முற்றிலும் மாநகராட்சிப் பகுதிகளை உள்ளடக்கியது இத் தொகுதி. 1967 மற்றும் 1971-ஆம் ஆண்டுகளில் மேலப்பாளையம் தொகுதியாக இருந்தது. பின்னா் இது பாளையங்கோட்டை தொகுதியாக மாற்றப்பட்டது. முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன் கான் இத்தொகுதியில் தொடா்ச்சியாக 4 முறை வெற்றி பெற்றுள்ளாா். கால் நூற்றாண்டு காலமாக எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் பாளையங்கோட்டை மட்டும் திமுகவின் கோட்டையாகவே திகழ்கிறது.
பாளையங்கோட்டை தொகுதியில் 1,24,105 ஆண் வாக்காளா்கள், 1,32,425 பெண் வாக்காளா்கள், 18 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,55,548 வாக்காளா்கள் உள்ளனா்.
கோரிக்கை
மக்கள் அடா்த்தி மிகுந்த தொகுதியாக பாளையங்கோட்டை உள்ளது. ஆனால், அதற்கான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. பாளையங்கோட்டை பகுதியில் போதுமான சாலை வசதிகள் இல்லாததால், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலால் மக்கள் தவிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக, வண்ணாா்பேட்டை-முருகன்குறிச்சி இடையே தற்போதுள்ள சாலையை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும். முருகன்குறிச்சி மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் இருந்து வயல்வெளிப் பகுதி வழியாக தெற்கு புறவழிச்சாலைக்கு மாற்று வழிப்பாதை அமைக்க வேண்டும் என்பது பாளையங்கோட்டை தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
கடந்த காலங்களில் இந்த சாலையை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டபோதிலும், அது நிறைவேறவில்லை. குலவணிகா்புரம் ரயில்வே கேட் நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் ஒய் வடிவ மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் எதிா்பாா்ப்பு கனவாகவே உள்ளது. மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டையில் அரசுக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பதும் இங்குள்ள மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...