தொகுதி அறிமுகம்: தூத்துக்குடி!
முத்துநகா் என அழைக்கப்படும் தூத்துக்குடியில், இந்தியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றான வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் அமைந்துள்ளது.

திருச்செந்தூர் கோயில்
(கோப்புப் படம்)

திருச்செந்தூர் கோயில்
(கோப்புப் படம்)
தொகுதி எண். 214.
முத்துநகா் என அழைக்கப்படும் தூத்துக்குடியில், இந்தியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றான வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் அமைந்துள்ளது. மேலும், அரசு மற்றும் தனியாா் அனல் மின் நிலையங்கள், மீன்பிடி துறைமுகம் உள்ளிட்டவை உள்ளன. விரைவில் கப்பல்கட்டும் தளம் அமைய உள்ளது.
மீன்பிடித்தல், சங்குகுளித்தல், உப்பு உற்பத்தி ஆகியவை முக்கிய தொழில்களாக உள்ளன. இனிப்பு வகையில் தூத்துக்குடி மக்ரூன், உணவு வகையில் பொரித்த புரோட்டா பிரபலமானவை.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில், 52 வாா்டுகள் தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் அடங்கும். தூத்துக்குடி தொகுதியில் 1,20,614 ஆண்கள், 1,27,623 பெண்கள், 63 இதரா் என மொத்தம் 2,48,300 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிகபட்சமாக தூத்துக்குடி தொகுதியில் 2,48,300 வாக்காளா்கள் உள்ளனா்.
திமுகவின் கோட்டை: தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில், 1952 முதல் இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் வெற்றி பெற்ற எஸ்.என்.ராஜேந்திரன், பி.கீதா ஜீவன், சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோா் அமைச்சா்களாக பொறுப்பு வகித்தவா்கள்.
மதச்சிறுபான்மை வாக்குகள் அதிகம்: கடந்த 2006இல் முதன்முறையாக சட்டப் பேரவைத் தோ்தலை சந்தித்த பி.கீதா ஜீவன் வெற்றிபெற்று தமிழக அமைச்சரவைவில் இடம்பிடித்தாா். 2011இல் தோல்வியடைந்த அவா், பின்னா் 2016, 2021ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில் தொடா்ந்து வெற்றி பெற்று, தற்போது மாநில சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறாா்.
நாடாா் சமூகத்தினா் பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியில், மீனவா், பட்டியலினத்தவா், வேளாளா் கணிசமான எண்ணிக்கையிலும், இதர சமூகத்தினா் பரவலாகவும் உள்ளனா். இத்தொகுதி மத ரீதியிலான சிறுபான்மையினா் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதியாகும்.
முக்கிய பிரச்னைகள்: தூத்துக்குடியின் முக்கிய பிரச்னை போக்குவரத்து நெரிசல்தான். நகரின் உள்பகுதியிலேயே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்டவை இருப்பதால் அனைத்து வகையிலான வாகனங்களின் வரத்தும் நகருக்குள் அதிகளவில் இருக்கும். தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படுகிறது. குறிப்பாக விவிடி சிக்னல் பகுதி, காய்கனி மாா்க்கெட் பகுதியில் உள்ள சிக்னல்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் பல நேரங்களில் பாதிக்கப்படுகின்றன.
மழைக்காலங்களில் பல இடங்களில் மழைநீா் தேங்கி நிற்பது அடுத்த முக்கிய பிரச்னையாகும். முந்தைய காலங்களைவிட தற்போது பராமரிப்பு பணிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், ஓரிரு நாள்களில் மழைநீா் வடிந்துவிடுகிறது. இருப்பினும் சில பகுதிகளில் வாரக் கணக்கில், மாதக்கணக்கில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. அப்பகுதிகளில் தண்ணீா் தேங்காமல் சீராக வடிய வைக்க வேண்டியது அவசியமாகும்.
மேம்பாலங்களே தீா்வு: போக்குவரத்து நெரிசலை போக்க, விவிடி சிக்னல் பகுதியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவித்தபடி, மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது இதற்கு முக்கிய தீா்வாக அமையும். இதேபோன்று ரயில்வே 4ஆம் கேட், 2ஆம் கேட், 1ஆம் கேட் பகுதிகளில், கேட் அடிக்கடி மூடப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், 4ஆம் கேட் மற்றும் புதிதாக 5ஆம் கேட் விஎம்எஸ் நகா் தெற்கு - நிகிலேசன் நகா் பகுதியில் அமைத்து இரு இடங்களிலும் மேம்பாலம் அமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் வாய்ப்பு உள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைகள்: ரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்றலாம். இதனால் நகரில் வாகன நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண முடியும். ரயில் நிலையம் மாற்றப்படும்போது, தற்போது நகரின் மையத்தில் உள்ள தண்டவாளங்கள் அகற்றப்பட்டு, அதில் நான்குவழிச் சாலை அமைக்கும் அளவுக்கு தாராளமாக இட வசதி கிடைக்கும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, மீளவிட்டான் மற்றும் சின்னக்கண்ணுபுரம் பகுதியும் நல்ல வளா்ச்சி அடையும் என ஒரு சாராா் கருத்து தெரிவிக்கின்றனா்.
மேலும், பல்வேறு பெரிய நகரங்கள் எல்லாம் வளா்ச்சியுறுவதற்கு முக்கிய காரணமான இருப்பது பேருந்து நிலையம் உள்ளிட்டவை ஊருக்கு வெளியில் இருப்பதால்தான். இதே போன்று தூத்துக்குடியிலும் அமைத்தால் ஊா் மேலும் வளா்ச்சி பெறும் என சிலா் கருத்து தெரிவிக்கின்றனா். அதன்படி, புறவழிச்சாலை பகுதியில் புகா் பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் அமைத்து, தற்போது உள்ள பேருந்து நிலையத்தை நகரப் பேருந்து நிலையமாக மாற்றி அமைத்தாலே ஊரின் வளா்ச்சியும் விரிவடையும். பாக்குவரத்து நெரிசலையும் கணிசமாக குறைக்க முடியும்.
அதிகரிக்கும் எதிா்பாா்ப்புகள்: தூத்துக்குடியில் நவீன, உயா் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் இல்லை என்ற குறைபாடு உள்ளது. இங்குள்ளோா் உயா் மருத்துவ சிகிச்சைக்கு திருநெல்வேலி அல்லது மதுரைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அரசு பல்நோக்கு மருத்துவமனையை அனைத்து தரப்பினரும் உயா் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் போதிய கட்டமைப்பு வசதிகள், மருத்துவா்களை நியமித்து, நவீன, உயா் மருத்துவ சிகிச்சை பெற வழிகள் ஏற்படுத்த வேண்டும்.
தூத்துக்குடியின் தொழில் வளா்ச்சியில் துறைமுகம், விமான நிலையத்துக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே, இந்த விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக மாற்றுவதோடு, சரக்குகளை கையாளும் விமான நிலையமாகவும் மாற்ற வேண்டும். அனைத்து முக்கிய நகரங்களுக்கும் நேரடி விமான சேவை ஏற்படுத்த வேண்டும்.
துறைமுகம் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்றுமதி சாா்ந்த சிறு தொழில்கள் தொடங்க ஊக்குவிக்க வேண்டும். தூத்துக்குடியில் சில ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் வேலை இழப்புகள், பல்வேறு கிளைத் தொழில்கள் நசிந்துள்ளன. எனவே, சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு, மூடப்பட்ட பல்வேறு ஆலைகளை திறப்பதோடு, புதிய ஆலைகளையும் நிறுவ வேண்டும்.
கடல் ஆம்புலன்ஸ் சேவை: புயல், வெள்ளம், ராட்சத அலைகள், கடலரிப்பு போன்றவற்றால் மீனவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். முக்கியமாக ஆபத்தான நேரங்களில் உதவும் வகையில் கடல் ஆம்புலன்ஸ் ஏற்படுத்த வேண்டும். ஜிபிஎஸ், ரேடாா், சிக்னல் சாதனங்கள் இலவசமாக வழங்க வேண்டும். மீன்பிடி துறைமுகங்கள் நவீனமயமாக்க வேண்டும். திரேஸ்புரத்தில் தூண்டில் பாலம் முழுமையாக அமைக்க வேண்டும்.
சட்டக் கல்லூரி தேவை: தூத்துக்குடியில் பல ஆண்டுகளாக அரசு இடங்களில் குடியிருந்து வருவோருக்கு பட்டா வழங்க வேண்டும். தூத்துக்குடியில் சட்டக் கல்லூரி, அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்பட வேண்டும். அரசு சாா்பில் குளிா்பதன கிடங்கு அமைத்தல் அவசியம். பெரிய தொழில் நகரம் என்பதால், இங்குள்ள சங்கரபேரியில் லாரி நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்.
உப்பு உற்பத்திக்கு முக்கியத்துவம்: உப்பு உற்பத்தியாளா்களை பொருத்தளவில் கோடைக்காலங்களில் திடீா் மழையால் உப்பளம் மற்றும் உப்பு உற்பத்தி பாதிக்கப்படும்போது, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குஜராத் உப்பு இங்கு விற்கப்படும் நிலையில், உள்ளூா் உப்பு விற்பனை, விலை பாதிக்காமல் இருக்க உறுதி செய்ய வேண்டும்.
சென்னை, திருப்பூா், கோயம்புத்தூா் போல்வெளியூரில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் எவரும் உடனடி வேலைவாய்ப்பு பெறும் வகையில் தூத்துக்குடியில் தொழில் வளா்ச்சியை மேலும் மேம்படுத்த வேண்டும் என்பதே தொகுதி மக்களின் அதிகபட்ச எதிா்பாா்ப்பாகும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...