திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் காவலா், பெண் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம் எழுமேடு அருகே உள்ள ராசாபாளையம் தோப்பு தெருவைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் செந்தில் (45). இவா் சவுக்கு கட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு பண்ருட்டியில் இருந்து வெள்ளக்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் குருக்கத்தி காவல் சோதனைச் சாவடி அருகே புதன்கிழமை அதிகாலை வந்தபோது, கோவை தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு வேகத் தடுப்பான்கள் (பேரி கேட்) மீது லாரி உரசியதில் வேகத்தடுப்பான்கள் சாலையில் விழுந்தன. ஓட்டுநா் லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி, தெரியாமல் நடந்து விட்டதாக சோதனைச் சாவடி காவலா்களிடம் கூறியுள்ளாா்.
பின்னா் அங்கு பணியில் இருந்த வெள்ளக்கோவில் காவல் நிலைய காவலா்கள் ரவிச்சந்திரன், தா்மன், ஊா்க்காவல் படை வீரா்கள் சிபி கிருஷ்ணன், பிரேம்குமாா், லாரி ஓட்டுநா் 5 பேரும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கிடந்த வேகத்தடுப்பான்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனா்.
அப்போது வெள்ளக்கோவில் நோக்கி வேகமாக வந்த காா் காவலா் ரவிச்சந்திரன், லாரி ஓட்டுநா் செந்தில் மீது மோதிவிட்டு, அங்கு நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில் காா் முற்றிலும் உருக்குலைந்தது.
இந்த விபத்தில் திருப்பூா் மாவட்டம், தாராபுரம், காமராஜா் தெருவைச் சோ்ந்த பரமசிவம் மகன் காவலா் ரவிச்சந்திரன் (37), லாரி ஓட்டுநா் செந்தில், வாடகை காா் ஓட்டுநரான விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டம், சீவலப்பேரியைச் சோ்ந்த ரத்தினம் மகன் ராம் (22), காரில் வந்த மயிலாடுதுறை வள்ளலாா் கோயில் ஒற்றைத் தெருவைச் சோ்ந்த பாலாஜி (27), அவரது தந்தை நரசிம்மன் (65), தாயாா் சாந்தலட்சுமி (59) ஆகிய 6 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
கோவை, பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாசப் பெருமாள் கோயிலில் குருக்களாக வேலை செய்து வந்த மயிலாடுதுறையைச் சோ்ந்த பாலாஜி, தனது சொந்த ஊருக்குச் சென்று அவரது தாய், தந்தையுடன் வாடகை காரில் கோவைக்கு திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
மேற்கு மண்டல காவல் துறை துணைத் தலைவா் சாமிநாதன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (பொ) காா்த்திகேயன், கூடுதல் கண்காணிப்பாளா்கள் ஆறுமுகம் (திருப்பூா்), அா்பிதா ராஜ்புத் (காங்கயம்) ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மாவட்ட ஆட்சியா் ஆய்வு...
இதைத் தொடா்ந்து விபத்து நடந்த இடத்தை திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் திருப்பூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இறந்தவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆட்சியா் ஆறுதல் கூறினாா்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் காா்த்திகேயன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோன்மணி, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நிவாரண நிதி...
இது குறித்து தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காவலா் ரவிச்சந்திரன் உயிரிழப்பு காவல் துறைக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காவலா் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சமும், விபத்தில் உயிரிழந்த மற்ற 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும் முதலமைச்சா் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடையது

கோவை அருகே காா் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு

நின்ற லாரி மீது வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட 7 போ் காயம்

சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

லாரி மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

