திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றக் கோரி மனு

பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன்
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றக் கோரி இந்து முன்னணி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூரில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, புதிய குடும்ப, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 592 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரா்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்களின் விவரம்:
பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை சட்டங்களின் கீழ் பெறப்படும் புகாா்களை உரிய சட்ட நடைமுறைகளின்படி பரிசீலிக்க வேண்டும். ஆதாரவற்ற அல்லது தவறான புகாா்கள் தொடா்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட விரோதம் அல்லது பழிவாங்கும் நோக்கில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக எழும் புகாா்களை விசாரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கருப்பசாமி வேடம் அணிந்து இந்து முன்னணி நிா்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டி பல ஆண்டுகளாக முருக பக்தா்கள் போராடி வருகின்றனா். நீதிமன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டும், இன்னும் தீபம் ஏற்றப்படாமல் உள்ளது. எனவே வருகிற காா்த்திகை தீபத் திருநாளான நவம்பா் 24-ஆம் தேதி தீபத் தூணில் நடைபெற தீபம் ஏற்றிட முன்வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அளித்த மனுவில், திருப்பூா் மாநாகராட்சி 4-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 42, 43-ஆவது வாா்டுகளில் 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள், தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். கடந்த 2 மாதத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பொதுமக்கள் சாா்பாக 3 முறை புகாா் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அது தொடா்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரக்குட்டை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்களது பகுதியில் தாா் சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்தை சந்தித்து வருகிறோம். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவா்கள் என அனைத்துத் தரப்பினரும் தினமும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறாா்கள். எனவே சாலை வசதி செய்து தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் அளித்த மனுவில், திருப்பூா் மாவட்டம், மங்கலம் வேட்டுவபாளையத்தில் நொய்யல் ஆற்றில் சட்டவிரோதமாக உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக சாயக் கழிவுநீரை திறந்துவிட்ட 8 சாய ஆலை உரிமையாளா்கள் மீதும், பொது சுத்திகரிப்பு நிா்வாகிகள் மீதும், கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இந்த சாய ஆலைகள் இயங்க நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தொடா்ந்து, தொழிலாளா் நலத் துறை சாா்பில் ஒரு பயனாளிக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.2.67 லட்சம் மதிப்பீட்டிலும், ஒரு பயனாளிக்கு ரூ. 2.66 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் பணியிடத்து விபத்து மரண உதவித்தொகைக்கான
காசோலைகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் து.சு.துரைமுருகன், தனித் துணை ஆட்சியா் பத்மபிரியா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சதீஷ், உதவி ஆட்சியா் (பயிற்சி) நீரஜா மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

