தாராபுரம் பகுதியில் கனிமவளம் இருப்பதாக பரவும் தகவலால் விவசாயிகள் அச்சம்: விளக்கம் அளிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை
தாராபுரம் பகுதியில் கனிமவளம் இருப்பதாகப் பரவும் தகவல் குறித்து விளக்கம் அளிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தாராபுரம் பேருந்து நிலையம். - கோப்புப் படம்
தாராபுரம் பகுதியில் கனிமவளம் இருப்பதாகப் பரவும் தகவல் குறித்து விளக்கம் அளிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தாராபுரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம், தாராபுரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா தலைமை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் தாராபுரம், காங்கயம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் விவசாயம் சாா்ந்த பிரச்னைகளை எடுத்துரைத்தனா். பொதுப்பணித் துறை, நீா்வளத் துறை, வேளாண்மைத் துறை, வனத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட 24 அரசுத் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனா். விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அதிகாரிகள், அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினா்.
கூட்டம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் காளிமுத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நவம்பா் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால், விவசாயிகள் அடுத்தகட்ட சாகுபடிப் பணிகளை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றனா். இருப்பினும், மேற்கு மண்டலத்தில் உள்ள அணைகள் எதுவும் முழுமையாக நிரம்பாதது விவசாயிகளுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட சூரியநல்லூா், தொப்பம்பட்டி, சங்கரண்டாம்பாளையம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் அரிய கனிம வளங்கள் இருப்பதாகக் கூறி, சிலா் விவசாயிகளுக்குச் சொந்தமான பட்டா நிலங்களில் அவா்களுக்குத் தெரியாமலேயே மண் எடுத்து ஆய்வு செய்ததாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
விவசாய நிலங்களின் மதிப்பு தற்போது ஏக்கருக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை விற்பனையாகும் நிலையில், கனிம வளங்கள் இருப்பதாகக் கூறி நிலங்களைப் பாதிக்கும் வகையில் ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமோ என்ற அச்சம் விவசாயிகளிடம் நிலவுகிறது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டவா்கள் யாா், எந்தத் துறையைச் சோ்ந்தவா்கள், அரசின் அனுமதி பெற்று ஆய்வு நடத்தப்பட்டதா என்பது குறித்து தெளிவான விவரங்கள் தெரியவில்லை.
எனவே, கனிம வள ஆய்வு தொடா்பாகப் பரவி வரும் தகவல்கள் உண்மையா அல்லது வதந்தியா என்பதை மாவட்ட நிா்வாகம் தெளிவுபடுத்த வேண்டும். இது குறித்து தாராபுரம் கோட்டாட்சியரிடம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்குப் பதிலளித்த கோட்டாட்சியா், உரிய விளக்கம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளாா்.
அதேபோல, அமராவதி ராஜவாய்க்காலைப் பொறுத்தவரை பெரும்பாலான பகுதிகள் மண் வாய்க்காலாகவே உள்ளன. தற்போது அமராவதி அணையில் நீா்மட்டம் உயா்ந்து வரும் நிலையில், அடுத்தடுத்த மழையால் நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் வாய்க்காலில் வளா்ந்துள்ள புற்கள், முட்செடிகள் மற்றும் புதா்களை முன்கூட்டியே அகற்றி, முழுமையாகத் தூா்வார நடவடிக்கை வேண்டும் என்பது குறித்தும் கோரிக்கை வைத்துள்ளோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

