அமராவதி பாசன வாய்க்கால்களில் கழிவு நீா் வெளியேற்றம்: தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
அமராவதி பாசன வாய்க்கால்களில் கழிவு நீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நடவடிக்கை - கோப்புப்படம்
அமராவதி பாசன வாய்க்கால்களில் கழிவு நீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தேங்காய் நாா், கயிறு தொழிற்சாலைகள் தாங்கள் சேகரித்து வைத்திருக்கும் கழிவு நீரை மழை காலங்களில் அமராவதி பாசன வாய்க்கால்களில் வெளியேற்றுகின்றன.
இதனால், நிலத்தடி நீா் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. எனவே, கழிவு நீரை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பாசனப் பகுதிகளுக்கு சரியான இடைவெளியில் தண்ணீா் திறந்துவிட வேண்டும். அமராவதி அணையின் ஷட்டரை சரி செய்ய வேண்டும். பிஏபி பாசனக் கால்வாய்களில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். தண்ணீா் விநியோகக் குழுவில் விவசாயிகளையும் இணைக்க வேண்டும் என்றனா்.
மேலும், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக ஆட்சியரிடம் 113 மனுக்களை வழங்கினா். அவற்றைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இதையடுத்து, அதிகாரிகள் பேசுகையில், மாவட்டத்தில் சாகுபடிக்குத் தேவையான நெல் 7.41 மெட்ரிக் டன், தானிய பயறுகள் 44.08 மெட்ரிக் டன், பயறு வகை விதைகள் 18.60 மெட்ரிக் டன், எண்ணெய் வித்து விதைகள் 3.50 மெட்ரிக் டன் மற்றும் யூரியா 2,831 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1,877 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 5,166 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் 664 மெட்ரிக் டன் ஆகியவை போதிய அளவு இருப்பில் உள்ளன என்றனா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஆனந்தி, வேளாண்மை இணை இயக்குநா் ஆதிசாமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சசிகலா, வருவாய் கோட்டாட்சியா்கள் சிவபிரகாஷ், குமாா், பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

