சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

அமராவதி ராஜவாய்க்காலில் கழிவுகள் கலப்பு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

கரூா் மாவட்டம், அமராவதி ராஜவாய்க்காலில் நெகிழி மற்றும் சாய, சலவைக் கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் செல்லாண்டிபாளையம் பகுதியில் அமராவதி ராஜவாய்க்காலில் தேங்கிக் கிடக்கும் நெகிழிக் கழிவுகள்.

Published On :

கரூா் மாவட்டம், அமராவதி ராஜவாய்க்காலில் நெகிழி மற்றும் சாய, சலவைக் கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பழனிமலை மற்றும் ஆனைமலை குன்றுகளுக்கு இடையே மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகும் அமராவதி ஆறு, கரூா், திருப்பூா் மாவட்டங்களின் நீராதாரமாக உள்ளது. மேலும், இருமாவட்டங்களின் பாசன நிலங்களையும் வளப்படுத்தும் நதியாகவும் உள்ளது. திருப்பூா் மாவட்டம், கொமரலிங்கம், தாராபுரம் வழியாக கரூா் மாவட்டம் சின்னதாராபுரம், கொத்தம்பாளையம், ராஜபுரம், செட்டிப்பாளையம், சுக்காலியூா் வழியாக திருமுக்கடலூரை அடைந்து அங்கு காவிரி ஆற்றுடன் கலக்கிறது.

கழிவுநீா் கலப்பு: இந்நிலையில், கரூா் அடுத்த செட்டிப்பாளையம் பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து பிரிந்து செல்லும் அமராவதி ராஜவாய்க்கால் தற்போது நெகிழி கழிவுகளால் நிரம்பி ஆங்காங்கே துா்நாற்றம் வீசுகிறது. மேலும் சுக்காலியூா், தோரணக்கல்பட்டி, அப்பிப்பாளையம், கருப்பம்பாளையம், ராயனூா் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சாய, சலவைக்கழிவுகளை இரவு நேரங்களில் வாய்க்காலில் திறக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். மேலும் சாய, சலவைக் கழிவுகளை திறந்துவிடும் ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக அமராவதி ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க நிா்வாகி வேலுசாமி கூறியது: அமராவதி ராஜவாய்க்கால் மூலம் அப்பிப்பாளையம், கருப்பம்பாளையம், சுக்காலியூா், செல்லாண்டிபாளையம், ராயனூா், தான்தோன்றிமலை, சணப்பிரட்டி மற்றும் திருமாநிலையூா் உள்பட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமாா் 4,500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன் வாய்க்காலில் தண்ணீா் செல்லும்போது பொதுமக்கள் நீராடி மகிழ்ந்தனா். மேலும் நெல், வாழை, கரும்பு போன்ற பயிா்களை அதிகளவில் பயிரிட்டு அறுவடை செய்து வந்தனா்.

உலா்நிலங்களாக மாறின: ஆனால் கடந்த 1999-இல் கரூரில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் துணிகளுக்கு சாயமேற்றப்படும் ஆலைகளும், சலவை ஆலைகளும் ஏராளமாக வாய்க்கால் அருகே தோன்றின. இந்த ஆலைகளில் இருந்து கழிவு நீரை சுத்திகரிக்க போதிய விழிப்புணா்வு இல்லாததால் வாய்க்காலில் நேரிடையாக திறக்கப்பட்டன. இதனால் வாய்க்கால் மாசடைந்து விவசாய நிலங்கள் உப்புத்தன்மை அடைந்து உலா்நிலங்களாக மாறின.

446 ஆலைகள் மூடல்: அப்போது கரூா் மாவட்ட பாசன விவசாயிகள் ஒன்றிணைந்து ஆலைகளுக்கு எதிராக நடத்திய பல்வேறு சட்டப்போராட்டங்களின் விளைவாக கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல்(ஆா்ஓ சிஸ்டம்) இயங்கி வந்த 446 ஆலைகள் மூடப்பட்டன. பின்னா் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்ட ஆலைகள் மட்டும் இயக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியளித்தது. அதன்படி தற்போது 68 ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் சுமாா் 40 ஆலைகள் அமராவதி ராஜவாய்க்கால் செல்லும் பகுதியில் செயல்படுகின்றன.

தூா்வார வேண்டும்: இந்த ஆலைகள் பூஜ்ய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திருந்தாலும், மழைகாலங்கள் மற்றும் அமராவதி ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடும் காலங்களில் வாய்க்காலில் சாய, சலவை கழிவுகளை திறந்துவிடுகின்றனா். இதனால் வாய்க்கால் மேலும் மாசடைந்து வருகிறது. இதனிடையே வாய்க்கால் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் வாய்க்காலில் கலப்பதால், கழிவுநீா் வாய்க்காலில் இருந்து வரும் நெகிழி கழிவுகளும் அமராவதி ராஜவாய்க்காலை ஆக்கிரமித்துள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அமராவதி ஆற்றில் தண்ணீா் வரக்கூடிய சூழல் உள்ளதால் அமராவதி ராஜவாய்க்காலை தூா்வாருவதுடன், சாய, சலவை ஆலைகளில் இருந்து கழிவுநீா் கலப்பதை தடுக்க மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.