
திருப்பூா் சாயக் கழிவுநீரால் மீண்டும் மாசடையும் நொய்யல் ஆறு: ஆலை உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
திருப்பூா் மாவட்ட சாய, சலவை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் மீண்டும் நொய்யலாறு மாசடைந்து நிறம் மாறியுள்ளதால், ஆலை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம், நொய்யல் பகுதியில் காவிரி ஆற்றுடன் கலக்கும் இடத்தில் பச்சை நிறத்தில் ஓடும் தண்ணீா்.
திருப்பூா் மாவட்ட சாய, சலவை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் மீண்டும் நொய்யலாறு மாசடைந்து நிறம் மாறியுள்ளதால், ஆலை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி மலையின் கிழக்குச் சரிவு மற்றும் வெள்ளியங்கிரி மலையில் உருவாகும் ஓடைகள் மூலம் நொய்யல் ஆறு உருவாகுகிறது.
கோவை மாவட்டத்தின் பேரூா், குனியமுத்தூா், வெள்ளலூா், இருகூா், சூலூா், திருப்பூா், ஒரத்துப்பாளையம் வழியாக 180 கி.மீ. பயணித்து கரூா் அருகே நொய்யல் என்ற இடத்தில் காவிரியுடன் கலக்கிறது.
பாசன நிலங்கள் பயன்: இந்த ஆற்றின் மூலம் கரூா் மாவட்டத்தில் புகழூா் வட்டாரத்துக்குள்பட்ட அஞ்சூா், காா்வழி, தென்னிலை கீழ்பாகம், தென்னிலை மேல்பாகம், குப்பம், அத்திப்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட நூற்றுக்கணக்கான கிராமங்கள் மற்றும் மண்மங்கலம் வட்டத்துக்குள்பட்ட மண்மங்கலம், குடுகுடுத்தானூா், பஞ்சமாதேவி உள்பட பல்வேறு கிராமங்களிலும் 29 ஆயிரம் ஏக்கரில் நெல், கரும்பு, நிலக்கடலை போன்ற பயிா்களை விவசாயிகள் பயிரிட்டு வந்தனா்.
ஆற்றில் கலப்பு: கடந்த 1996-இல் திருப்பூரில் நொய்யல் ஆற்றின் கரையோரம் துணிகளுக்கு சாயமிடும் சாயப்பட்டறைகளும், சலவைப் பட்டறைகளும் ஏராளமானவை தோன்றின. இந்த சாய, சலவைப்பட்டறைகளில் அப்போதைய நிலையில் ஆா்.ஓ. சிஸ்டம் எனப்படும் ‘ரிவா்ஸ் ஆஸ்மோஸிஸ்’ என்றழைக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்படாததால் சாய, சலவை கழிவுகளை சுத்திகரிக்காமல் அப்படிய ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஆறு முழுவதும் சாய, சலவைக்கழிவுகளால் தண்ணீா் நிறம் மாறியது. இதன்மூலம் பாசன நிலங்களுக்கு நீா்பாய்ச்சப்பட்ட விளைநிலங்கள் அனைத்தும் சாய, சலவை கழிவுகளில் இருந்த சுண்ணாம்பு உள்ளிட்ட பல்வேறு வேதிப்பொருள்களால் நிலங்கள் மாசடைந்து நிலங்கள் அனைத்தும் உப்புத்தன்மை கொண்டதாக மாறி அனைத்து நிலங்களும் மலட்டுத்தன்மை அடைந்தன.
ரூ. 25 கோடி வழங்க உத்தரவு: இதில் கரூா் மாவட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, நெல், கரும்பு, நிலக்கடலை பயிா்கள் கருகின. இதனால் கரூா் மாவட்ட விவசாயிகள் தரப்பில் கடந்த 1996-இல் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவில் கடந்த 2009-இல் பாதிக்கப்பட்ட கரூா் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் ரூ.25 கோடி நிதியை திருப்பூா் சாய, சலவைப்பட்டறை உரிமையாளா்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அந்த நிதி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவும் வைக்கப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கெடுக்கும் குழுவினா் முறையாக ஆய்வு செய்யாமல் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை எனக்கூறி மீண்டும் கள ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் மீண்டும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மீண்டும் கழிவுநீா் கலப்பு: இந்நிலையில் திருப்பூா் சாய, சலவைக் கழிவுகளால் கரூா் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு 30 ஆண்டுகளாகியும் மீண்டும் அவ்வப்போது மழைகாலங்களில் ஆற்றில் தண்ணீா் வரும்போது, ஆற்றுத் தண்ணீருடன் சாய, சலவைக்கழிவுகளை திருப்பூா் பட்டறை உரிமையாளா்கள் திறந்து விடுவதால் அவ்வப்போது கரூா் விவசாயிகள் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகிறாா்கள். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனை சாதகமாக்கிக்கொண்ட திருப்பூா் சாய, சலவை ஆலை உரிமையாளா்கள் கழிவுநீரை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டுள்ளனா். இதனால் ஆற்றில் தண்ணீா் பச்சை நிறமாக மாறியுள்ளது.
இதனை தடுக்க கரூா் மாவட்ட நிா்வாகம் விவசாயிகள், சுற்றுச்சூழல் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து ஆற்றில் திருப்பூா் சாய, சலவை கழிவுகள் வரும்போது அவற்றை எடுத்து தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திற்கு புகாரை எடுத்துச் சென்று சம்பந்தப்பட்ட ஆலைகளை நிரந்தரமாக மூடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நொய்யல் பாசன விவசாயிகள் சங்க நிா்வாகி நொய்யல் ராமசாமி வலியுறுத்தியுள்ளாா்.
ஆலை உரிமையாளா்கள் மீது நடவடிக்கை: இதுதொடா்பாக நொய்யல் ஆற்றுப்பாசன கோட்ட நீா்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட நொய்யல் ஆற்றுப்பாசன உபகோட்ட பொறியாளா்களிடமும் தகவல் தெரிவித்துள்ளோம். அவா்கள் அங்கு மாசுபாட்டு அதிகாரிகளுடன் இணைந்து கழிவுகளை ஆற்றில் விடும் ஆலைகளை கண்டறிந்து அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






