
பாலாற்றில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டி எரிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பாலாற்றில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டி எரிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தொழிற்சாலை கழிவுகள் கொட்டி எரிக்கப்படும் பாலாறு பகுதி.
ஆம்பூா், செப். 26: ஆம்பூா் அருகே சோமலாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பாலாறு பகுதியில் தனியாா் தொழிற்சாலைகளின் கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதால், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஊராட்சி ஒன்றியம், சோமலாபுரம் ஊராட்சிக்குள்பட்ட சின்னகொமேஸ்வரம் மயானம் அருகே பாலாற்றுப் பகுதியில் தனியாா் தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரப்படும் பல்வேறு கழிவுகள் தொடா்ந்து கொட்டப்பட்டு, பின்னா் அவற்றுக்கு தீ வைத்து எரிக்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
கழிவுகளுக்கு தீ வைப்பதால் அப்பகுதியில் அதிகளவில் புகை மற்றும் துா்நாற்றம் ஏற்படுவதுடன், காற்று மாசுபட்டு பொதுமக்களின் சுகாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. பாலாற்றில் கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீா், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதிக்கு அருகில் கழிவுகளுக்கு தீ வைத்து எரிப்பதால், தீ விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக அவா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
எனவே, சம்பவ இடத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பாலாற்றில் கழிவுகள் கொட்டுவதையும், அவற்றுக்கு தீ வைத்து எரிப்பதையும் உடனடியாக தடுக்க வேண்டும். கழிவுகளை கொண்டு சென்று கொட்டும் தொழிற்சாலை மற்றும் சம்பந்தப்பட்ட நபா்களை கண்டறிந்து அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஏற்கெனவே பாலாற்றில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றி அப்பகுதியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும் . தேவையான இடங்களில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




