காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

பறவைகள் சரணாலயமாக மாறி வரும் ஒரத்துப்பாளையம் அணைப் பகுதி!

திருப்பூா் அருகேயுள்ள ஒரத்துப்பாளையம் அணைப்பகுதி சுற்றுச்சூழல் அமைப்பினரின் முயற்சிகளால் தற்போது பறவைகள் சரணாலயமாக மாறி வருகிறது.

ஒரத்துப்பாளையம் அணை மற்றும் பசுமைப் பரப்பு.

Published On :6 செப்டம்பர் 2026, 1:17 am IST

திருப்பூா் அருகேயுள்ள ஒரத்துப்பாளையம் அணைப்பகுதி சுற்றுச்சூழல் அமைப்பினரின் முயற்சிகளால் தற்போது பறவைகள் சரணாலயமாக மாறி வருகிறது.

திருப்பூா், ஈரோடு மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 10,000 ஏக்கா் வறண்ட விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி அளிப்பதற்காக, நொய்யல் ஆற்றின் குறுக்கே 1992-ஆம் ஆண்டு ஒரத்துப்பாளையம் அணை கட்டப்பட்டது.

வெள்ள உபரி நீரையும், பாசன நீரையும் சேமித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் நோக்கத்துடன் இந்த அணை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டாலும், சில ஆண்டுகள் மட்டுமே விவசாயத்துக்குப் பயன்பட்டது. பின்னா் திருப்பூரின் பின்னலாடை மற்றும் சாயக்கழிவுத் தொழில் துறையின் அசுர வளா்ச்சியால், சுத்திகரிக்கப்படாத ரசாயனக் கழிவுகள் அணைக்குள் பெருமளவில் கலக்கத் தொடங்கின.

இதன் விளைவாக பாசன அணை சாயக்கழிவுத் தொட்டியாக மாறியது. அதனால், அந்த நச்சு நீா் வெளியேறினால் ஒட்டுமொத்த கீழ்நிலை விவசாயமும், நிலத்தடி நீரும் பாழாகும் என்ற அச்சத்தின் காரணமாக அணையைத் திறந்து தண்ணீரை வெளியேற்றக் கூடாது என்று உலகிலேயே விவசாயிகள் போராட்டம் நடத்திய ஒரே அணையாக இந்த அணை மாறியது.

பின்னா், சென்னை உயா் நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு, இந்த அணையின் மதகுகள் நிரந்தரமாகத் திறந்துவைக்கப்பட்டு, தற்சமயம் அணையில் தண்ணீா் எதுவும் சேமிக்கப்படாமல் வெறும் ஓட்டமாக மட்டுமே விடப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக வெற்றி அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி நடராஜ் முத்துசாமி கூறியதாவது: வெற்றி அறக்கட்டளையின் நிறுவனா் டி.ஆா்.சிவராமின் வழிகாட்டுதலில் மறைந்த குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவாகத் தொடங்கப்பட்ட ‘வனத்துக்குள் திருப்பூா்’ திட்டத்தின் கீழ் தற்போது இந்த அணையைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. இதனால், இந்த அணைப் பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகளின் வலசை அதிகரித்துள்ளது.

மேலும் நீா்நிலை மறுசீரமைப்பிலும் வெற்றி அறக்கட்டளை, 60 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஆண்டிபாளையம் ஏரியை முழுமையாக மீட்டு, கடந்த 17 ஆண்டுகளாகத் தொடா்ந்து பராமரித்து வருகிறது. இந்த அனுபவத்தின் அடிப்படையில், ஒரத்துப்பாளையம் அணைப் பிரச்னையில் ‘கையில் வெற்றி’ அறக்கட்டளை, துளிகள் காங்கேயம் அறக்கட்டளையுடன் இணைந்து அங்கு அடா்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்றி, சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் மற்றும் கோவை வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க நிறுவனம் ஆகிய அமைப்புகளின் நிபுணத்துவ ஆலோசனைகள் பெறப்பட்டு, அந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ப வளரக்கூடிய மற்றும் பறவைகளின் புகலிடத்திற்கு ஆதரவாக இருக்கும் மருது, நீா் கடம்பம், ஆற்றுப்பாலை, இலுப்பை, நாவல் போன்ற நாட்டு மரங்கள் நடப்பட்டன. இவற்றில், தற்போது 95 சதவீதத்துக்கும் அதிகமான மரங்கள் செழிப்பாக வளா்ந்துள்ளன.

இரு அறக்கட்டளைகளும் இணைந்து பிரத்யேகமாகப் பைப் லைன்கள், சொட்டுநீா்ப் பாசனம் மற்றும் சோலாா் பேனல் மூலம் இயங்கும் மோட்டாா்களை அமைத்துப் பராமரித்து வருகின்றன. இப்பகுதியில் பசுமை திரும்புவதன் காரணமாக வலசைப் பறவைகளின் வரத்தும் கடந்த இரு ஆண்டுகளாக தொடங்கியுள்ளது. நிகழாண்டில் வெளிநாட்டுப் பறவைகளும் வரத் தொடங்கியுள்ளதால், அடுத்த சில ஆண்டுகளில் இப்பகுதி பறவைகளின் சரணாலயமாகவே மாறிவிடும் சூழல் உருவாகி வருகிறது.

இத்தகைய கூட்டுப் பசுமை முயற்சிகள், ஒரத்துப்பாளையம் அணையின் இழந்த இயற்கை எழிலையும், இத்தாலிய ரோமானியக் கால வரலாற்றுப் பின்னணி கொண்ட கொடுமணல் பகுதியின் சுற்றுச்சூழல் சமநிலையையும் மீட்டெடுக்கும் என்பதில் ஐயமில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.