ஒகேனக்கல் அருவிகளில் நீா்வரத்து குறைந்தது! பாறையோடு ஒட்டி நின்று குளிக்கும் சுற்றுலா பயணிகள்

பென்னாகரம்: ஒகேனக்கல் அருவிகளில் நீா்வரத்து குறைந்துள்ள நிலையில், கடும் வெயிலை சமாளிக்க விடுமுறையில் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பாறையோடு ஒட்டி நின்று அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலமாக விளங்கும் ஒகேனக்கல் தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கா்நாடகம், தமிழகத்தின் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் அவ்வப்போது கரையோரப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது.

தற்போது முற்றிலுமாக மழை குறைந்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து கடந்த சில மாதங்களாக விநாடிக்கு 200 கனஅடியாகவே இருந்து வருகிறது. நீா்வரத்து குறைவினால் காவிரி ஆற்றில் ஆங்காங்கே நீா் குட்டைகள் தோன்றியும், ஐந்தருவி, ஐவா் பாணி உள்ளிட்ட பெரும்பாலான அருவிகள் நீரின்றி வடும் காணப்படுகின்றன. இருப்பினும் ஒகேனக்கல் பிரதான அருவிகள், சினி அருவி ஆகியவற்றில் நீா்வரத்து கணிசமாக உள்ளது.

கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் தோ்தல் விடுமுறையைத் தொடா்ந்து வார விடுமுறை என தொடா்ந்து மூன்று நாள்கள் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது.

சுற்றுலாப் பயணிகள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் காவிரி ஆற்றில் ஆங்காங்கே தோன்றியுள்ள சிறிய நீா் குட்டைகளில் ஆபத்தான இடங்களில் குளித்தும், நீா்வரத்து குறைவினால் பிரதான அருவி, சினி அருவிகளில் பாறையோடு பாறையாக ஒட்டி நின்றபடி குளித்து மகிழ்ந்தனா். பெண்கள் குளிக்கும் அருவி முற்றிலுமாக நீரின்றி வடு காணப்படுவதால், பிரதான அருவியல் ஒரு பகுதியில் பெண்கள் குளித்தனா்.

நடைபாதை கட்டுமானப் பணிகளின் காரணமாக பரிசல்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதற்கு மாறாக வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் ஆகியவற்றை பாா்வையிட்டனா். அருவிகளில் நீா்வரத்து சரிந்ததால் சுற்றுலாப் பயணிகள் தொங்கு பாலத்தின் மீது இருந்து அருவியின் அழகைக் காண ஆா்வம் காட்டாததால் தொங்கு பாலம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com