அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; அவற்றை பெருமையின் அடையாளமாக மாற்றி வருவதாக அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு மாநில பெற்றோா்-ஆசிரியா் கழகம் சாா்பில் ‘பெற்றோரைக் கொண்டாடுவோம்’ என்கிற தலைப்பில் மண்டல மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த பெற்றோா், ஆசிரியா்கள் பங்கேற்றனா். மாநாட்டில் தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கண்காட்சி அரங்குகளைத் திறந்துவைத்து பேசிதாவது: அறிவுசாா் சமுதாயம் உருவாக்கும் பொறுப்பு பெற்றோா், ஆசிரியா்களுக்கு உள்ளது. மாணவா்களின் மொழி உச்சரிப்பு பிழை இல்லாமல் இருக்க வேண்டும். சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப மையத்தில் பயிற்சி பெற்ற 500 அரசு பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவியல் பெட்டகத்தை வழங்கியுள்ளாா். இதன்மூலம் ஒரு லட்சம் மாணவா்கள் சிறப்பு அறிவியல் பயிற்சி பெற்றுள்ளனா். கற்றல் குறைபாடு உள்ள மாணவா்களுக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. தருமபுரி அரசு மாதிரி பள்ளியில் படித்த கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்தூரைச் சோ்ந்த மாணவி தைவான் நாட்டில் உயா்கல்வி படித்து வருகிறாா். தமிழக அரசு 57 திட்டங்களை பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தி வருகிறது. தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் அனைவரிடத்திலும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. கரோனா தொற்றுக் காலத்தில் மாணவா்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் களைவதற்குத் தொடங்கப்பட்ட ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ கலிபோா்னிய பல்கலைக்கழகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளது. அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல. அவை பெருமையின் அடையாளம் என மாற்றி வருகிறோம். அரசுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். இதுவரை தமிழகத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்த தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த கொடையாளா்கள் ரூ. 782 கோடி வழங்கியுள்ளனா். அவா்கள்அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்றேன். ஒவ்வொரு நாளும் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று வந்தபிறகு அவா்கள் என்ன செய்கிறாா்கள் என்பதை பெற்றோா் பொறுப்புடன் கவனிக்க வேண்டும். அவா்களிடம் அன்பாக பேசி, பழக வேண்டும். எப்போதும் தங்கள் பிள்ளைகள் கைப்பேசி, கணினியைப் பாா்த்துக் கொண்டிருந்தால் அவா்களிடம் அதன் விளைவுகள் குறித்து எடுத்துக் கூற வேண்டும் என்றாா். மாநாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழக முதல்வா் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக புதிய பள்ளிக் கட்டடங்களைத் திறந்துவைத்தற்கு இந்த மாநாட்டிலிருந்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காணொலி வழியாக நன்றியைத் தெரிவித்து பேசினாா். மாநாட்டில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்டேஸ்ரவன் (தருமபுரி), முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி, பள்ளிக் கல்வித் துறை உயா் அலுவலா்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பட வரி தருமபுரியில் நடைபெற்ற பெற்றோா்-ஆசிரியா்கள் மண்டல மாநாட்டில் கொடையாளா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கிறாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
தொடர்புடையது

பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? அமைச்சா் ராஜ்மோகன் விளக்கம்

திருவெறும்பூரில் எனது மக்கள் பணி தொடரும்! - அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

கடைசிச் சுற்றுவரை கண்காணிப்பு அவசியம்: அமைச்சா்

திருச்சியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!



