அரூா் அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்றிதழ் குழுவினா் ஆய்வு
அரூா்: அரூா் அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்றிதழ் வழங்கும் மதிப்பீட்டுக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
தேசிய சுகாதார மிஷன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் லக்ஷ்யா மற்றும் மஸ்கான் ஆகிய தர மேம்பாட்டுப் பிரிவுகள் குறித்து தேசிய தரச் சான்றிதழ் வழங்கும் குழுவினா் தருமபுரி மாவட்டம், அரூா் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
ஜி.பத்மராஜ், ஷீஜா ஆகியோா் அடங்கிய இக்குழு அரூா் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், கா்ப்பிணிகளின் பிரசவ கால முன், பின் பராமரிப்புகள், பச்சிளம் குழந்தைகள் முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கான சுகாதார சேவைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கா்ப்பிணிகளுக்கான மருத்துவ பரிசோதனை வசதிகள், மகளிருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், மருந்து, மாத்திரைகளின் இருப்புகள், சுகாதார வசதிகள், பதிவேடு பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனா்.
அதையடுத்து தினமும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் தேசிய மதிப்பீட்டாளா்கள் கேட்டறிந்தனா். ஆய்வின்போது தருமபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநா் எம்.சாந்தி, மருத்துவ அலுவலா் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

