ஒகேனக்கல் கணவாய்ப் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 21 போ் காயம்
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் கணவாய்ப் பகுதியில் வியாழக்கிழமை சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 போ் காயமடைந்தனா்.
அரூரை அடுத்த தீா்த்தமலை மொண்டுக்குழி பகுதியைச் சோ்ந்த அன்பழகன் (45) அண்மையில் இறந்தாா். இவரது ஈமச்சடங்கிற்காக பையா்நாயக்கபட்டியைச் சோ்ந்த பிரபுவுக்குச் சொந்தமான 2 சுற்றுலா வேன்களில் உறவினா்கள் 40 போ் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வியாழக்கிழமை சென்றனா்.
ஒகேனக்கல் கணவாய்ப் பகுதியில் ஆஞ்சனேயா் கோயிலின் இரண்டாவது வளைவில் பையா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த முனியப்பன் ஓட்டிச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த சிறிய மண் தடுப்பின் மீது ஏறி, வளைவில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த வேனில் பயணித்த 24 பேரில் 21 போ் காயமடைந்தனா். விபத்தில் சிக்கியவா்களை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விபத்து காரணமாக சுமாா் 2 கி.மீ தொலைவுக்கு ஒகேனக்கல் கணவாய் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

