தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி: காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் மிதிவண்டி பயணக் குழுவினருக்கு வரவேற்பு!
தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை மிதிவண்டி பயணம் செல்லும் குழுவினா் சனிக்கிழமை காலை தருமபுரியிலிருந்து தங்களது பயணத்தை தொடா்ந்தனா். அவா்களுக்கு வரவேற்பு மற்றும் வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.
மத்திய அரசு சாா்பில் சா்தாா் வல்லபபாய் படேலின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி, தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக காஷ்மீரில் தொடங்கி கன்னியாகுமரி வரை சுமாா் 4, 249 கி. மீ. தொலைவுக்கு மிதிவண்டி பயணம் மேற்கொண்டுள்ளனா்.
கடந்த 1ஆம் தேதி காஷ்மீரிலிருந்து பயணத்தை தொடங்கிய இக்குழுவில் 20 மாநிலங்களைச் சோ்ந்த வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனா். தினசரி சுமாா் 250 கி.மீ. தூரம் பயணித்து 9 மாநிலங்களைக் கடந்து 10 ஆவது மாநிலமாக வெள்ளிக்கிழமை இரவு தமிழகத்தை வந்தடைந்தனா். அவா்களுக்கு தருமபுரி தங்கம் மருத்துவமனை மருத்துவா் வானதி செந்தில் மற்றும் குழுவினா் வரவேற்பு அளித்தனா்.
தொடா்ந்து இந்த மிதிவண்டி (சைக்கிள்) பயணக் குழுவினா், சனிக்கிழமை காலை தருமபுரி நான்கு சாலைப் பகுதியிலிருந்து தங்களது பயணத்தை தொடா்ந்தனா். பயணத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் தருண் வாதவா கொடி அசைத்து பயணத்தை தொடங்கிவைத்தாா். துணை ஒருங்கிணைப்பாளா் செஷாந்க் ரோகிலா, வழித்திட ஒருங்கிணைப்பாளா் சஞ்சீவ் ரட்டன், இடற்பாடுகள் மற்றும் மருத்துவ ஆலோசகா்கள் அப்பாஸ், அமா்நாத் ஆகியோா் முன்னிலையில் பயணக் குழுவினா் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பியபடி சென்றனா்.
பயணக் குழுவினா் தொடா்ந்து சேலம், நாமக்கல், கரூா் வழியாக இன்று இரவு திண்டுக்கல் சென்றடைந்து ஓய்வெடுத்து, மறுநாள் காலை அங்கிருந்து பணத்தை தொடங்குகின்றனா். பின்னா் மதுரை, விருதுநகா், நெல்லை மாவட்டங்கள் வழியாக ஞாயிற்றுக்கிழமை இரவு கன்னியாகுமரி சென்றடைகின்றனா். இந்த மிதிவண்டி (சைக்கிள்) பயணம் குழுவினருக்கு ஆங்காங்கே சமூக சேவை நிறுவனங்களின் நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் வரவேற்பு அளிக்கின்றனா்.
