அரூரில் இளம்பெண் குத்திக் கொலை: கணவா் தலைமறைவு
அரூா்: அரூரில் இளம் பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த அவரது கணவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் பூந்திமஹால் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் மகள் மகாலட்சுமி (29). இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகேயுள்ள கோதியழகனூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேஷுக்கும் (35) கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மகாலட்சுமி, வெங்கடேஷ் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி அரூரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளாா்.
இந்த நிலையில் மகாலட்சுமியின் கணவா் வெங்கடேஷ் கடந்த 15-ஆம் தேதி அரூரில் உள்ள மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு திருச்செந்தூா் கோயிலுக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை காலை 7 மணியளவில் மீண்டும் அரூா் வந்துள்ளாா்.
இதையடுத்து தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், மனைவி மகாலட்சுமியை கழுத்து மற்றும் கையில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மகாலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து வெங்கடேஷ் தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தலைமறைவானாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரூா் டிஎஸ்பி (பொறுப்பு) ராமமூா்த்தி, காவல் ஆய்வாளா் செந்தில் ராஜ்மோகன் ஆகியோா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
